தாப்பா பிஎன்: நாங்கள் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு ‘கற்றுக் கொடுத்தோம்’.

tapahபேராக் தாப்பாவில் உள்ள ஒராங் அஸ்லி வாக்காளர்கள் பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்கு வழி காட்டும் வகையில்  ஆளும் கூட்டணியும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் ‘பயிற்சி வகுப்புக்களை’ நடத்துவதாக பிகேஆர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை பிஎன் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.

தாப்பா பிஎன் தலைவரும் ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினருமான  சம்சுதின் அபு ஹசான், சரியான முறையில் வாக்குகளைச் செலுத்துவதற்கு ஒராங் அஸ்லிக்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே தமது பிரிவு ஏற்பாடு செய்த அந்த நிகழ்வின் நோக்கம் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானிடம் அதனைத் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களிடையே செல்லாத வாக்குக்ள் அதிகமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் “பயிற்சிகளுக்கு” ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

“நாங்கள் பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. தாங்கள் விரும்பும் யாருக்கும் வாக்களிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. சரியான முறையில் வாக்குச் சீட்டுக்களில் கையெழுத்திடுவதையும் வாக்குகளைப் போடுவதையும் பற்றியே நாங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்,” என அவர் சொன்னதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘பிகேஆர் கட்சியும் அரிசியைக் கொடுக்கலாம்’

tapah1ஒவ்வொரு ஒராங் அஸ்லி வாக்காளருக்கும் ஐந்து கிலோ அரிசி கொடுக்கப்பட்டதை சம்சுதீன் ஒப்புக் கொண்டார். ஆனால் அது வாக்குகளைக் கவரும் நடவடிக்கை அல்ல என்றார் அவர்.

அது ஒராங் அஸ்லிக்களும் சாதாரண மக்களும் உட்பட வசதி குறைந்த மக்களுக்கு கொடுக்கப்படும் சாதாரண உதவியே அது என அவர் வலியுறுத்தினார்.

“அந்த அரிசி அன்பளிப்பு வாக்குகளைப் பிடிப்பதற்காக அல்ல. ஏனெனில் நாங்கள் அவர்களது சுமையைக் குறைக்க உதவிகளை கொடுத்து வருகிறோம்.”

“பிகேஆர் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதுவும் கொடுக்கலாம். யாரும் அதனைத் தடுக்கப் போவதில்லை,” என சம்சுதின் மேலும் குறிப்பிட்டார்.

தாப்பா ஒராங் அஸ்லி விவகார மேம்பாட்டுத் துறை உள்ளூர் ஒராங் அஸ்லி மக்களை பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு செய்வதற்காக ‘பயிற்சி வகுப்புக்களை’ நடத்தி வருவதாக பேராக் பக்காத்தான் ராக்யாட் நேற்று கூறிக் கொண்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவருடைய ஒத்துழைப்புடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் அந்த ‘பயிற்சி வகுப்புக்கள்’ கடந்த மாதம் ஜாலான் பாகாங் நெடுகிலும் உள்ள ஒராங் அஸ்லி கிராமங்களில் நடத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துக் கொண்டது.

சட்ட விரோதமானது

tapah2தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கும் செண்டிரிங் சட்ட மன்றத் தொகுதிக்குமான போலி வாக்குச் சீட்டுக்கள் எனத் தோற்றமளித்த இரண்டு காகிதத் துண்டுகள் அந்த ‘பயிற்சி வகுப்புக்களில்’ கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்றும் அது மேலும் குறிப்பிட்டது.

பின்னர் அந்த ஒராங் அஸ்லி மக்கள் ஒராங் அஸ்லி விவகாரத் துறை அதிகாரி, தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் முன்னிலையில் போலி வாக்குச் சீட்டில் பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு ‘கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“அந்த இரண்டு போலி வாக்குச் சீட்டுக்களிலும் பிஎன் -னுக்கு வாக்களித்தவர்களுக்கு 5 கிலோ அரிசி வெகுமதியாக உடனடியாகக் கொடுக்கப்பட்டது,” எனப் பேராக் பக்காத்தான் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

அந்த நடவடிக்கை,  ஒரு நபர் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு உள்ள உரிமை சம்பந்தப்பட்ட 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 9வது பிரிவில் தலையிடுவதாகவும் பக்காத்தான் குறிப்பிட்டது.

போலி வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதும் கூட அதே சட்டத்தின் பிரிவு 3(ஜே)-ஐ மீறுகின்றது என்றும் அது வாதாடியது.

தாப்பா ஒராங் அஸ்லி விவகாரத் துறையுடன் தொடர்பு கொள்வதற்கு மலேசியாகினி நேற்று தொடக்கம் முயற்சி செய்து வருகின்றது.