கம்பள வணிகரும் அல்தான்தூயா ஆவியும்

deepakஅலாவுதீன்: அல்தான்தூயாவையும் ரோஸ்மாவையும் சம்பந்தப்படுத்தி தீபக் கூறுவதால் நஜிப்பின் நிலை என்னவாகும்?

கோமாளி: கறைபடியாத வேட்பாளர்களை தேசிய முன்னணி அறிமுகப்படுத்தும் என்ற பிரதமரின் கருத்து பலரின் வயிற்றை கலக்கியிருக்கும். அதன் மூலமாக கட்சிக்கு ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தித் தர பிரதமர் நஜிப்புக்கு ஆசை.

சத்து மலேசியா கொள்கை வழிதான் சிறப்பாக பெயர் போடுவதாக நஜிப்புக்கு ஒரு நம்பிக்கை. மக்கள் அவரை நம்ப வேண்டும் என்பது ஒரு புறமிருக்கட்டும். இப்போது அவரது அந்த நம்பிக்கையை சோதிக்கும் வகையில் உள்ளது இந்த தீபக் என்ற கம்பள வணிகர் வெளியிடும் தகவல்கள்.

தீபக் ஜெய்கிஷன் என்ற அந்த கம்பள வணிகர், அல்தாதூயா கொலையில் பிரதமருக்கு தொடர்புள்ளது என்ற வகையில் தொடர்ச்சியான பல செய்திகள் வந்தன. ஆனால், 2008 ஆகஸ்ட் 23-இல் புக்கிட் மெர்தாஜாம் குவார் பெராகு மசூதியில் தனக்கு அல்தாந்தூயாவை தெரியாது – தொடர்பும் கிடையாது என்று குரான் மீது சத்தியம் செய்தார் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்.

தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியம் 2008-இல் செய்த முதல் சத்தியப் பிரமாணம் கொல்லப்பட்ட மங்கோலியப் பெண் அந்தான்துயாவுடன் நஜிப் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறியது. அடுத்து, பாலசுப்ரமணியம் இன்னொரு சத்தியப் பிரமாணத்தில் தாம் தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறினார். இதன்வழி முதல் சத்தியப் பிரமாணம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்கிறார் தீபக்.

Bala,Najib,Nazir n Rosmahஜூலை 3, 2008 மாலையில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரிடமிருந்து தமக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக தீபக் கூறினார். அன்று காலையில், அவரது முதல் சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட பாலசுப்ரமணியத்தை தமக்குத் தெரியும் என்பதால் ரோஸ்மா தமது உதவியை நாடினார் என்றார் தீபக். அதன் பிறகு நஜிப்பின் சகோதரர் நஜிம் வழி ஒரு இணக்கம் காணப்பட்டது. அதன் பிறகு பாலா நஜிப் பெயர் சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கி தனது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை செய்தார்.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 18, 2006 இல் அல்தான்தூயா கொல்லப்பட்டு C-4 என்ற வெடி மருந்தால் சின்னாப் பிண்ணம் ஆக்கப்பட்டார். அது சார்பாக நஜிப்பின் பாதுகாவலர்களாக இருந்த போலிஸ் சிறப்பு பிரிவைச் சார்ந்த (Unit Tindakan Khas) இன்ஸ்பெக்டர் அஜிலா அட்ரியும் (வயது 30) அவர் உதவியாளர் சைருல் அஜார் உமாரும் (வயது 35) மூன்று வருட விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 9, 2009 இல் கொலைக் குற்றதிற்காக தூக்குத் தண்டனையை பெற்றனர். எதற்காக கொன்றனர் என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்காததால் இது ஒரு ‘செட் அப் கேஸ்’ என்ற அபிப்பிராயம் பரவலாக உள்ளது.

இது தேர்தல் காலம். அல்தான்தூயாவின் ஆவியை இப்போது எதிர்கட்சியினர் என்று இல்லாமல் அம்னோவின் மேல் நிலை அரசியல் தலைவர்களும் ஏவி விட்டது போல் நிலைமை உள்ளது.

காய்ச்சல் வந்தால் ஆவி பிடிப்பார்கள், ஆனால் நஜிப்பை பிடித்துள்ள இந்த ஆவியால் கண்டிப்பான காய்ச்சல்தான் அவருக்கு. கறைபடியாத வேட்பாளர்களை தேசிய முன்னணி அறிமுகப்படுத்தும் என்ற அவரது கருத்து அவரது ‘நம்பிக்கை’ ஆதரவாளர்களின் வயிற்றையும் கலக்கியிருக்கும்.