அரசாங்கம் இரண்டு நிபந்தனைகளுடன் UEC சான்றிதழை அங்கீகரிக்கக் கூடும்

UECஅரசாங்கம் சுயேச்சை சீன இடைநிலைப் பள்ளிகள் வழங்கும் ஐக்கிய தேர்வுச் சான்றிதழை (UEC) அங்கீகரிப்பது பற்றிப் பரிசீலிக்கக் கூடும் என ஹுவா ஜோங் என்னும் மலேசிய சீனர் சங்கங்கள் சம்மேளனத் தலைவர் பெங் இங் ஹுவான் கூறியிருக்கிறார்.

மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த பட்சம் கிரடிட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நேற்று நடத்தப்பட்ட 40 நிமிடச் சந்திப்புக்குப் பின்னர் அவர் சொன்னார்.

அந்த UEC பாடத் திட்டத்தில் உள்ள வரலாறு, பூகோளம் ஆகிய பாடங்களில் உள்ளூர் அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனையாகும்.

நாட்டுப்பற்றை வலுப்படுத்தும் பொருட்டு UEC-யில் உள்ள வரலாறு, பூகோளம் ஆகிய பாடங்களில் உள்ளூர் அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாக ஹுவா ஜோங் துணைத் தலைவர் செங் லாய் ஹாக் தெரிவித்தார்.

பிரதமருடன் சந்திப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு, டோங் ஜோங் என்ற ஐக்கிய சீன இடைநிலைப்பள்ளிக் குழுக்கள் சங்கம், ஐக்கிய சீனப் பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜியாவ் டோங்) ஆகிய சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடலுக்குத் தாம் ஏற்பாடு செய்யப் போவதாகவும் அவர் சொன்னார்.

“அந்த UEC சான்றிதழை அங்கீகரிப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் இது நல்ல தொடக்கம்,” என்றார் அவர்.

தைவான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உட்பட பல அனைத்துலகப் பல்கலைக்கழகங்கள் அந்த சான்றிதழை நுழைவுத் தகுதியாக அங்கீகரித்துள்ளன.