தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!

mic-indian-gangsterபாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப்  பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா?

கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது என்பதில் ஐயமில்லை.

இன்று வெகுவாக பேசப்படும் பவானி வசனம் “கேள், கேள், கேள்” என்பதுதான் அம்னோவின் தாரக  மந்திரம். மஇகா கேட்காவிட்டால் அது தனது பேச்சுரிமையை இழந்துவிடும். எனவே மஇகா பேச வேண்டும் என்றால் அது அம்னோ சொல்வதைத்தான் கேட்க வேண்டும், கிளிப் பிள்ளைப் போல் அம்னோ சொல்வதைத்தான் பேச வேண்டும்.

மகாதீர் பிரதமராக 1981-இல் பொறுப்பேற்றபோது பிடிஎன் (Biro Tata Negara) என்ற அரசாங்க மையம் மாற்றம் கண்டது. அதன்வழி அம்னோவின் தேசிய முன்னணி இல்லையென்றால் மலாய்க்காரர்கள் தங்களது அரசியல் பலத்தை இழப்பார்கள் என்ற வகையில் இனவாத வெறியை பிடிஎன் வளர்த்தது. நாட்டு பற்று, விசுவாசம் என்பது மலாய் இனத்தின் ஆதிக்கத் தன்மையில்தான் உள்ளது என்றும், பிற இனங்கள் அதை ஆதரித்தும் அனுசரித்தும்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை உண்டாக்கினர். நாட்டின் கொள்கை அமைப்பிலும், அரசாங்க உயர் நிலை வேலைகளில் பணி புரிபவர்களும் இந்த இனவாதக் கொள்கையில் கட்டுண்டனர்.

அரசாங்க ஊழியர்களின் தலைமை அதிகாரிகள் இந்த மூளைச்சலவையைப் பெற்ற பிறகுதான் பதவியேற்றம் பெறுவார்கள். இதன்வழி அம்னோவை மட்டுமே மையமாக கொண்ட அரசாங்கத்தை வலுவாக அமைத்தவர் குடியேறிப் பரம்பரையில் வந்த துன் மகாதீர் முகமாட்.

mic_prime_ministerஇன்று இந்த இனவாதம் புற்று நோய் போல் பரவி விட்டது.

2008-இல் படுதோல்வி கண்ட அம்னோ, தனது பலத்தை மீண்டும் பெற பல வகையான சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. அதில் இந்தியர்களைப் பிரித்தாள்வது, பணத்தை அள்ளி வீசி பாமர மக்களை மயக்குவது, பணத்தைக் கொடுத்து தமிழ்ச் சமூக ஆதரவாளர்களை வாங்குவது போன்றவை அவற்றில்  அடங்கும்.

அம்னோவின் குறிக்கோள் தனது பலத்தை மீண்டும் பெற வேண்டும் என்பதே! 2008-ஆம் ஆண்டுமுதல் இதுவரையில் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக எந்த மாற்றமும் கொள்கை அளவில் உருவாகவில்லை. வருடாந்திர நிதி பட்டுவாடாவிலும் (Annual Budget), பிரதமர் துறை நிதி ஒதுக்கீட்டிலும் உள்ள பணத்தைக் கொண்டுதான் தமிழர்களின் ஓட்டுகளை வாங்கும் நாடகம் நடக்கிறது.  இதில் எட்டப்பர், சகுனி, புருட்டோ, கருணா, கர்ணன் இப்படிப் பல வேடங்கள். தனிப்பட்ட வகையில் விசுவாசம் என்பது இருப்பினும் தர்மத்தைக்  கொல்லும் விசுவாசம் வெல்லாது என்பது கீதை.

அதைவிடுவோம், மஇகா-வுக்கு வருவோம். விடுதலை முதல் புறக்கணிக்கப்பட்டத் தமிழர்கள் இன்று நாட்டு மக்கள் என்ற பெயரில் ஓட்டுரிமையைக் கொண்டு புதிய வழிமுறையில் ஆட்சிமுறை மாற்றம் வழி புதிய சாகாப்தத்தைப் படைக்க உள்ளனர். இது ஒன்றுதான் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே வழிமுறையும் கூட.

அம்னோ அள்ளி வீசும் பணத்தையும் கூத்தடிக்கும் புற நடவடிக்கைகளையும் கொண்டு  தமிழர்களின் அரசியல் உரிமைகளைப்  பணயம் வைக்கும் வகையில்தான் தேசிய முன்னணியில் உள்ள மஇகா-வால் நடந்து கொள்ள முடியும். அதன் விசுவாசம் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் நன்றியுள்ள நாய் போல் ஐந்தறிவில்தான் செயல் பட முடியும்.

எனவே மஇகா மட்டுமல்ல ஐபிஎப் இத்யாதிகளுக்கும் இதே நிலைப்பாடுதான். இவர்களால் தமிழர்களின் அரசியல் உரிமையைப் பிரதிநிதிக்க இயலாது-முடியாது.