செலாயாங் மன்றத்துடன் பேசுங்கள்: டோலோமைட்டுக்கு மந்திரி புசார் அறிவுறுத்தல்

1doloசெலாயாங்கில் பார்க் அவென்யு கொண்டோமினியம் கட்டுவதன் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனமான டோலமைட் புரொபர்டிஸ் சென். பெர்ஹாட் விளக்கமளிக்க சிலாங்கூர் அரசாங்கம் ஒரு வாய்ப்பு வழங்கத் தயாராகவுள்ளது.

அந்நிறுவனம் செலாயாங் முனிசிபல் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.

“அவர்கள் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம். மன்றம் அதன் கருத்தைத் தெரிவிக்கலாம்.பின்னர், அதை மாநில திட்டப் பிரிவில் விவாதிக்கலாம்”. மந்திரி புசார் ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்தார்.

1dolo1பிப்ரவரி 8-இல் டோலோமைட் நிறுவனம் அதன் திட்டம் பாதுகாப்பானது என்றும் அதனால்  சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்றும் கூறியதாக அறிவிக்கப்பட்டது. அதன் நிர்வாக இயக்குனர் லூ சூங் கியோங், கொண்டோமினியம் பத்துமலை கோயிலுக்கு அருகில் கட்டப்படுவதால் கோயில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுவதை ஆராய சுயேச்சை நிறுவனம் ஒன்றை நியமனம் செய்திருப்பதாகக் கூறினார்.

ஆனால், அத்திட்டத்தை முடக்கிவைக்க சிலாங்கூர் அரசு முடிவு செய்ததால் ஏமாற்றம் அடைவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இதற்குமுன்னர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்றினால் அத்திட்டம் இரத்துச் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.