தபப223 பேரணி: வேட்பாளராகும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்கு அல்ல

ramasamyதமிழர் பணிப் படை (தபப) நேற்று (223) ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார்.

நேற்று மாலை மணி 6.30 க்கு அப்பொதுக்கூட்டம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் தொடங்கியது.

தமிழர் பணிப் படை ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டதின் நோக்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணிக் கட்சியின் சில இந்திய தலைவர்களுக்கு அந்த அணியின் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படாது என்ற சூழ்நிலை இருப்பதால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை எதிரணியின் தலைமைத்துவத்திற்கு தெரியப்படுத்தி கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதை உறுதி செய்துகொள்வதாகும் என்று பல வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு இது குறித்து கருத்துரைக்குமாறு செம்பருத்தி.கோம் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II முனைவர் பி. இராமசாமிடம் கேட்டுக்கொண்டது.

சிறீலங்கா அதிபர் ராஜபக்சே இந்நாட்டிற்கு வருகை மேற்கொள்வதை தடுத்து நிறுத்துவதற்காக தமிழர் பணிப் படை அமைக்கப்பட்டது. அது வெற்றிகரமாக ராஜபக்சே இந்நாட்டிற்கு வராமல் தடுத்து நிறுத்தியது என்றார் பி.இராமசாமி

அதனைத் தொடர்ந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. “இது ஒரு தமிழர் எழுச்சி மாநாடு. இதற்கும் கட்சியில் வேட்பாளராகும் வாய்ப்பைப் பெறுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை”, என்று இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார்.

“எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில், கட்சிகளில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த மாநாடு நடைபெறுவது ஒரு எதேச்சையான சம்பவம். அவ்வாறான குறிக்கோளைக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுகிறது என்பதில் உண்மையில்லை”, என்று அவர் உறுதியாகக் கூறினார்.

ஏன் அழைக்கப்பட்டிருக்கிறார்?

பெரியார் ஈவேரா வந்தார். சுயமரியாதை விழிப்புணர்வைப் பரப்பினார். இந்நாட்டு தமிழர்கள் தீவிர ஈடுபாடு காட்டினர். இன்று அந்த உணர்வு மழுங்கிப் போய் விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு வந்தார். இந்திய அமைப்புகளையும், தொழிற்சங்கங்களையும் உருவாக்கக் சொன்னார். பிரிட்டீஷ் பேரரசின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த தொழிற்சங்கம் எஸ். எ. கணபதியின் தலைமையில் போராட்டம் நடத்தியது. அவர் தூக்கிலிடப்பட்டார். இப்போது தொழிற்சங்கம் செயல்படுவதாகத் தெரியவில்லை.

அண்ணா வந்தார். தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்குதான் அவர்கள் வாழ்கிறார்கள் என்றார். இன்று அவர்கள் நகர்புறங்களின் ஓரங்களில் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இங்கு வருகை புரிந்துள்ளார். ஏன்?

அண்ணா வந்தார். தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள் என்று ஒரு பொய்யைக் கூறி விட்டு போய் விட்டார். கருணாநிதி வந்தார். அவர் வரலாற்று கதை கூறிவிட்டுப் போனார். ஆனால், சீமான் இங்கு வருகை அளித்திருப்பது “எங்களுடைய நிலையை கட்சியில் வலுப்படுத்துவதற்காக அல்ல” என்பதை  இராமசாமி மீண்டும் வலியுறுத்தினார்.

“சீமான் ஒரு போராட்டவாதி. தமிழகத்தில் சரியான சமத்துவம் இல்லை. இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சீமான் துடித்தெழுந்தார்.

“தமிழ் இனம் ஒரு தேசிய இனம். ஆனால் அதற்கு நிலப்பரப்பு இல்லை. தமிழ் ஈழம் மூலம் அதனை எட்டும் வாய்ப்பு இருந்தது. அதனை அடைந்தேயாக வேண்டும். தமிழ் ஈழம் போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை. அதற்கு நம் நாட்டு தமிழர்களைடையே விழிப்பு மற்றும் போராட்ட உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சீமான் அழைக்கப்பட்டுள்ளார் என்று இராமசாமி விளக்கம் அளித்தார்.