டென்னிஸ்: மயாமி மாஸ்டர் பட்டம் வென்றார் மர்ரி

andy_murray_miami_mastersபிரிட்டனின் அண்டி மர்ரி உலகத் தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளார்.

மயாமியில் நேற்றமுன்தினம் முடிவடைந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரரை வீழ்த்தி அண்டி மர்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரை மர்ரியால் முந்த முடிந்துள்ளது.

ஆனாலும் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவோக் ஜோகோவிச்சை மர்ரியால் அவ்வளவு எளிதில் எட்டிப் பிடிக்க முடியாது, காரணம் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் ஜோகோவிச் முன்னிலையில் உள்ளார்.

மயாமியில் நடந்த ஏடிபி மாஸ்டர்ஸ் பந்தய இறுதி ஆட்டத்தில் ஸ்கொட்லாந்துக்காரரான மர்ரின் முதல் சேட்டை 2-6 என்று தோற்றிருந்தாலும், அடுத்த இரண்டு ஆட்டங்களை 6-4, 7-6 என்ற கணக்கில் போராடி வென்றிருந்தார்.

இந்த வெற்றிக்குப் பின்னர் பிபிசி ஊடகவியலாளரிடம் பேசிய மர்ரி, தரவரிசையில் இரண்டாம் இடம் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும் வெற்றி-தோல்வி, தரவரிசை இவற்றையெல்லாம் தாண்டி எதிர்வரும் செம்மண் தரைப் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதிலேயே தன்னுடைய முழுக்கவனமும் குவிந்திருக்கிறது என்றார்.