பெர்சே: தேர்தலில் அமைதிகாக்கும் உறுதிமொழியா, அதற்கு வேறு இடம் செல்லுங்கள்

1bersihவரும் தேர்தலில் அமைதிகாக்க உறுதிகூறும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அசிஸ் இப்ராகிம் விடுத்துள்ள கோரிக்கையை பெர்சே இயக்கக்குழு நிராகரித்துள்ளது.

ஏனென்றால், தேர்தல்கள் அமைதியாக நடப்பதைத்தான் பெர்சே என்றுமே வலியுறுத்தி வந்திருக்கிறது என்று அக்குழு கூறிற்று. எனவே, துங்கு அசிஸ் தேர்தலில் “குழப்பத்தை” விளைவிக்கக்கூடியவர்கள் யாரோ அவர்களை நோக்கித்தான் அந்த அறைகூவலை விடுக்க வேண்டும்.

1bersih1“கண்ணுக்கு எதிரே நடக்கும் அரசியல் வன்செயல்களையும் கட்டுப்பாடற்ற  முறையில் நடக்கும் கறைபடிந்த பரப்புரைகளையும்  பார்க்கையில்  “குழப்பங்களுக்கான” மூலங்கள் வேறு இடத்தில்  இருப்பதாக நினைக்கிறோம்”, என்றந்த குழு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அவ்வறிக்கையில், ஏப்ரல் 11-இல் அப்துல் அசீஸ் பெர்சே-க்கு ஒரு கடிதம்  அனுப்பி வைத்திருந்ததாக அது குறிப்பிட்டது. அதில் அவர், பெர்சேயின் நடுநிலை பற்றிக் கேள்வி எழுப்பியதுடன் தேர்தலுக்கு இடையூறு செய்யும் நோக்கம் அதற்கு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். எனவே, அவ்வமைப்பு அமைதியான தேர்தலுக்கு உறுதிகூறும் ஆவணமொன்றில் கையொப்பமிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

“எங்கள்மீது இப்படி ஒரு அபாண்டத்தைத் தூக்கிப்போடும் அவரது கோரிக்கையுடன் எப்படி ஒத்துப்போவதென்று தெரியவில்லை.

“எதுவானாலும், தேர்தல் நாளில் அமைதியாக நடந்துகொள்வதாக உறுதிகூறி பெர்சே எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை.

“அதுதான் (அமைதியான தேர்தல்) எங்களின் நிலைபாடாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்தும் வாக்காளர் பயிற்சிகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறோம்”, என்று கூறிய அக்குழு அவரது குற்றச்சாட்டு “முழுக்க முழுக்க பொய்யாகும்” என்று கண்டித்தது.

ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியாவின் முன்னாள் தலைவரான அப்துல் அசீஸ், இப்படி வீண்பழி கூறுவதை விடுத்து தேர்தல் ஆணையம் (இசி) வெளிப்படையாகவும் பொறுப்புடனும் பாடுபாடின்றியும் நடந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது.

அத்துடன் அரசியல் வன்செயல்களும் களங்கப்படுத்தும் பரப்புரைகளும் நடக்கின்றன. அவர் அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.