தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்

rafizi13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல்  மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார்  என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

“தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும் வரையில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு  எங்கள் மனச்சாட்சி சொல்கிறது,” என அன்வார் இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்தக் குழு நாடு முழுவதும் தேர்தல் நடைமுறையில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள், மோசடிகள் குறித்த
ஆதாரங்களையும் தகவல்களையும் திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கி விட்டதாகவும் அவர் சொன்னார்.

“அவரது குழு சர்ச்சைக்குரிய தொகுதிகளின் முடிவுகளை ஆய்வு செய்து மோசடிகள் நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரங்களை வழங்கும்.”

டிஏபி-யிலும் பாஸ் கட்சியிலும் அமைக்கப்பட்டுள்ள அது போன்ற குழுக்களும் ராபிஸி குழுவும் தேர்தல் முறைகேடுகள் குறித்து பெர்சே அமைக்கும் மக்கள் தீர்ப்பு மன்றத்துடன் அணுக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அன்வார் சொன்னார்.

“மோசடிகள், முறைகேடுகள் வழியாக நஜிப் அப்துல் ரசாக் (பிரதமர்) இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் அடுத்த சில வாரங்களில் பொது மக்களுக்கு வழங்குவோம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.