தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்

1 copsபோலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லா கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

“பல போலீஸ் அதிகாரிகள்  அழைக்கப்படடு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“புலன் விசாரணை விரைவாக செய்து முடிக்கப்பட்டு தர்மேந்திரனின் இறப்புக்குப் பொறுப்பானவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றாரவர்.

பிணப் பரிசோதனையில் தர்மேந்திரன் இறப்பில் குற்றவியல் அம்சங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து  புலன் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எடுத்துக்கொண்டது.

அது வெளியிட்டுள்ள அறிக்கை, “அதற்காக ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது வெளிப்படையான விசாரணையை நடத்தும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க முயலாது”, என்று கூறியது.

1 cops 2 surenநேற்று தர்மேந்திரன் மனைவியிடமும் அவரின் வழக்குரைஞர் என். சுரேந்திரனிடமும்(இடம்) போலீஸ் விசாரணை செய்தது.

இதுவரை, தனிப்பட்ட எண்மரிடம் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெரித்தா ஹரியான் கூறியது.

தர்மேந்திரன் மே 11-இல் ஒரு சண்டை பற்றிப் புகார் செய்யப் போனபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்ட விவரம் மே 19-இல்தான் அவரின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மே 21-இல் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று குடும்பத்தார் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் இறந்த செய்திதான் வந்தது.