முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ஜெயலலிதா, மமதா

Jayalalithaa_pointing_fingerஇந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறகிறது.

மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார். மாநாட்டின் ஒரு பகுதியாக நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாநில முதல்வர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. ஶ்ரீ

அந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த வகுக்கப்பட்டுள்ள புதிய வியூகத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 25ம் தேதி சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணியின்போது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்த மாநாடு ஒரு சம்பிரதாயம் என்றும், அதில் கலந்து கொண்டாலும் பேச வாய்ப்பளிப்பதில்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மாநாட்டை புறக்கணிக்கவிருக்கிறார். ஆனால் அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

TAGS: