வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு டிஏபி சட்ட உதவி வழங்கும்

passportபிஎன் ஊழல், அதிகார அத்துமீறல் எனக் கூறப்படுவதை எதிர்த்தற்காக தங்கள் பாஸ்போர்ட்கள் ரத்துச்  செய்யப்பட்ட வெளிநாட்டு மலேசியர்கள் நீதிமன்றத்தில் போராடுவதற்கு டிஏபி உதவி செய்யும்.

“தங்களது அடிப்படை மனித உரிமையான அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியதற்காக மலேசியர்கள் பழி வாங்கப்பட்டு வழக்குப் போடப்படுவதை பார்த்துக் கொண்டு டிஏபி சும்மா  இருக்காது,” என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 6,564 மலேசியர்களுடைய பாஸ்போர்ட்களை குடிநுழைவுத்
துறை ரத்துச் செய்யும் என கடந்த வாரம் அதன் தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட் அறிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோர் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களிலும் மற்ற குற்றச்
செயல்களிலும் தொடர்பு உடையவர்கள் என்றும் அவர் சொன்னார்.passport1

வெளிநாடுகளில் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்களும் அந்தப் பட்டியலில் இருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

என்றாலும் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டவர்களும் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதின் மூலம் குடிநுழைவுச் சட்டங்களை மீறியதாக  தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டு மலேசியர்களுடைய சிங்கப்பூர் வேலை அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டதை  அவர் சுட்டிக் காட்டினார்.

passport2தமது முடிவுக்கு ஆதரவாக குடிநுழைவுச் சட்டம் 1959/63ன் எட்டாவது பிரிவை மேற்கோள் காட்டியதை  அலியாஸ் மறுத்த போதிலும் 1979ம் ஆண்டு கூட்டரசு அரசாங்கத்துக்கும் லோ வாய் கொங்-கிற்கும்  இடையிலான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் குடிநுழைவுத் துறைக்கு அந்த அதிகாரம்  இருப்பதாக தெரிவித்தார்.

அலியாஸ் அறிக்கை மலேசியர்களுடைய உரிமையை கேலிக் கூத்தாக்குகிறது என்றும் வெளிநாடுகளில்  வசிக்கும் மலேசியர்களுடைய பாஸ்போர்ட்களை ரத்துச் செய்யும் நடவடிக்கை சட்ட விரோதமானது  என்றும் லிம் வருணித்தார்.

1979ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நிராகரித்த 2009ம் ஆண்டு கூட்டரசு நீதிமன்ற முடிவின் படி
குடிநுழைவுத் துறைக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை என முன்னாள் வழக்குரைஞர் மன்றத்
தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் சுட்டிக் காட்டியுள்ளதையும் லிம் குறிப்பிட்டார்.

“அடுத்த வாரம் மேலும் விளக்கமளிப்பதாக அலியாஸ் வாக்குறுதி அளித்துள்ள போதிலும் பிரதமர் நஜிப்
அப்துல் ரசாக் அரசாங்கத்தின் நிலையை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி
கோருகின்றது. அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததற்காக தங்கள் உரிமைகல் பறிக்கப்பட
மாட்டாது என மலேசியர்களுக்கு அவர் உறுதி அளிக்க வேண்டும்.”

 

TAGS: