அன்வார் நாடாளுமன்றத் தொடக்க கூட்டத்தை புறக்கணிப்பது பற்றி சிந்திக்கிறார்

anwarமே 5 பொதுத் தேர்தலின் சட்டப்பூர்வ நிலை குறித்து பரவலாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆதரவாக  13வது நாடாளுமன்றத்தின் தொடக்க கூட்டத்தை புறக்கணிப்பது பற்றி அன்வார் சிந்திக்கிறார். அத்துடன்  அவர் நாடாளுமன்ற கேள்விகளைச் சமர்பிக்கவும் மறுத்துள்ளார்.

ஜுன் 24ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அமைச்சர் நிலைப் பதில்களுக்கு
கேள்விகளைச் சமர்பிப்பதற்கான காலக்கெடு புதன் கிழமை முடிவடைந்தது.

அந்த பெர்மாத்தாங் எம்பி எந்தக் கேள்விகளையும் சமர்பிக்கவில்லை. அது குறித்து நாடாளுமன்றத்தில்
அவரது எதிர்ப்பாளர்கள் அவரைக் குறை கூறுவது திண்ணம்.

“அரசியல் என்பது ஒர் எண்ணமாகும். 13வது பொதுத் தேர்தலில் விரிவாக மோசடிகள் நிகழ்ந்துள்ளது
என பரவலாக கருதப்படுகின்றது. ஆகவே நாடாளுமன்ற தொடக்கக் கூட்டத்தை புறக்கணிப்பது பற்றிச்
சிந்திப்பதற்கு அது போதுமானது,” என அன்வார் சொன்னார்.

கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சிக்கு கிடைத்த நாடாளுமன்ற இடங்கள் டிஏபி-யைக் காட்டிலும்
குறைவாக இருந்த போதிலும் அன்வார் நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவராக முன்மொழியப்படுவார்
என எதிர்பார்க்கப்படுகின்றது.anwar1

வழக்கமாக எதிர்க்கட்சிகளில் அதிக இடங்களை பிடித்த கட்சித் தலைவருக்கு அந்தப் பொறுப்பு  கொடுக்கப்படும்.

பக்காத்தான் தோழமைக் கட்சிகளான டிஏபி 38 இடங்களையும் பிகேஆர் 30 இடங்களையும் பாஸ் 21  இடங்களையும் கடந்த தேர்தலில் வென்றன.

இரண்டு வாரக் காலக் கெடு மிகவும் அதிகமானதாகும்

அமைச்சர் நிலைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வார அவகாசம்
மிகவும் நீண்டது எனக் கருதுவதால் தாம் கேள்விகளைச் சமர்பிக்கவில்லை என்றும் அன்வார்
சொன்னார்.

‘உலகம் முழுவதும் நாடாளுமன்றங்களில் மூன்று வேலை நாள் மட்டுமே காலக் கெடு
வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் அது பின்பற்றப்படுகின்றது,”
என அவர் சொன்னார்.

“இது போன்ற விஷயங்களுக்கு இரண்டு வாரக் காலக்கெடு என்பது நீண்ட காலமாகும். அரசியல்
மாற்றங்களும் திருப்பங்களும் வேகமாக நிகழ்கின்றன. இன்றைய பிரச்னை பற்றி நீங்கள் தொடுக்கும்
கேள்விக்கு இரண்டு வார காலத்தில் ஏற்படும் நிகழ்வுகளினால் அதற்குப் பதில் கிடைக்கும் போது அது
பொருத்தமற்றதாகி விடக் கூடும்.”

“அரசியலில் ஒரு வாரம் என்பது நீண்ட காலமாகும் என முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட்
வில்சன் கூறியுள்ளார். ஆகவே இரண்டு வாரம் மிக அதிகமாகும்.”