விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!

ltte_leaderதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக்  இலங்கை கருதுகிறது. இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து இப்போதும் ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கைக்கு  வெளிநாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பலர் மூலம்பணம் வருவதாகவும் அவை சேரும் இடம் குறித்தும் தாம் அக்கறையுடன் இருப்பதாக இலங்கை அரசு கவலைகொள்கிறது.

புலிகளின் சர்வதேச பொருளாதாரத் தொடர்புக்கு தடை விதிக்க பல வழிகளில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.

அவர்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் பயிற்சியளித்திருக்கக் கூடும் என இலங்கை சந்தேகிக்கிறது. பேரணியின்போது நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெறலாம் என்ற அச்சமும் கவலையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: