பூச்சோங் முரளிக்கு தற்காலிக விடுதலை கிடைக்குமா?

murali_jailedஇரண்டு வாரங்களுக்கு மேலாக சுங்கை பூலோ சிறையில் வாடும் பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்தின் (வயது 45) 18 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு கோரும் மனு ஒன்றை, வரும் திங்கள் கிழமை, ஜூன் 10 தேதி, சா அலாம் உயர் நீதிமன்றம் செவிமடுக்கும்.

கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் முரளி சுப்ரமணியத்திற்கு 18 மாத சிறை தண்டனையையும் அதோடு ரிம 3,000 அபராதத்தையும் விதித்தது. இந்த வழக்கை மேல் முறையீடு செய்யவிருப்பதால் தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைக்க அவருடைய வழக்கறிஞர் ச. செல்வம் முன்வைத்த மனுவை மஜிஸ்திரேட் நோர் அபிடா இட்ரீஸ் தள்ளுபடி செய்தார். அதனால் முரளி விலங்கிடப்பட்டு உடனடியாக  சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2011-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி பிற்பகல் 12.50 மணியளவில் சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி க. சரஸ்வதி என்பவரை அவரது அறையில் கடமை ஆற்றுவதில் இருந்து தடுத்து நிறுத்தியதற்காக அல்லது மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளி குற்றம் சாட்டப்பட்டார்.

murali_jailed02கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு தேவையற்ற வகையில் நீடிக்கப்பட்டதாலும், வழக்கு சுமூகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்த காரணத்தினாலும் மஜிஸ்ரேட் நீதிபதி கடுமையான தண்டனை கொடுக்க காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

வாவாசன் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தபோது, அந்த சங்கத்தை தடை செய்யக்கோரி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பலவகையான இயக்கங்களை பிரதிநிதிப்பதாக் கூறிக்கொள்ளும் பூச்சோங் முரளி, முன்னாள் மஇகா உறுப்பினரும், நடப்பு பிகேஆர் பூச்சோங் தொகுதி தலைவரும் ஆவார்.

இவர் மீது பல போலிஸ் புகார்கள் செய்யப்பட்ட போதும், இவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு நடப்பில் இருந்த போது வழக்கு தொடுத்த தலைமை ஆசிரியர் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்ததாகவும், அச்சமயம் பிரபலமான கிள்ளான் வட்டார தொழிலதிபர் ஒருவர் அவருக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த நபரே முரளியை ஜாமீனில் எடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது.

TAGS: