தென்னிலங்கையில் காற்று-மழை; 5 மீனவர்கள் பலி, 31 பேரைக் காணவில்லை

storm_sri_lanka_floods_rainஇலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மேற்கு மற்றும் தெற்கு கரையோர மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பெருமளவிலான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலுக்குச் சென்ற பல படகுகள் காணாமல்போயுள்ளன. காணாமல்போயுள்ள 31 மீனவர்கள் தேடப்பட்டுவருகிறார்கள். 5 மீனவர்கள் இதுவரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்தும் இந்த மோசமான காலநிலை நீடிக்குமென்பதால் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுதவிர மலையகத்தில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பல இடங்களில் வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மரங்கள் விழுந்துகிடந்ததால் போக்குவரத்துகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, காலி பலபிட்டிய பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற 18 மீன்பிடி படகுகள் காணாமல்போயுள்ளன. அங்கு பல மீனவர்களை காணவில்லை.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் காணாமல்போன மீனவர்களைத் தேடுமாறு மீனவர்கள் ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதி முழுவதும் இன்று காலை களேபரமாகக் காட்சியளித்தது.

‘அதிகாரிகள் முன்னெச்சரிக்கை வழங்கவில்லை’

கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் ஏற்படும் என்று அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை அறிவித்தல்களை வழங்கவில்லை என்று மீனவர்கள் தரப்பிலிருந்து பலத்த குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இயற்கை இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு இன்று சனிக்கிழமை அதிகாலையே, அதாவது சுழல்காற்று வீசத்தொடங்கிய பின்னரே வளிமண்டலவியல் திணைக்களத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்ததாக அந்த நிறுவனத்தின் உயரதிகாரி பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு பற்றி வளிமண்டலவியல் துறையின் முன்னெச்சரிக்கைப் பிரிவின் இயக்குநர் எஸ்.ஆர் ஜயசேகரவிடம் கேட்டபோது, நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் 4 மணியளவில் தங்களது வழமையான காலநிலை அறிவிப்பில் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தமது பேச்சை மீறியும் கேட்காமல் மீனவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த விடயம் குறித்து மீன்பிடித்துறை துணையமைச்சர் சரத் குணரத்னவிடம் கேட்டபோது, அப்படியான குற்றச்சாட்டு வந்திருப்பதாகவும் அதுபற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-BBC

TAGS: