‘ 13வது திருத்தச் சட்டத்தை மாற்றப்படக் கூடாது’ – கத்தோலிக்க ஆயர்கள்

bishop_joseph_ponniahஇலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கு பதிலாக புதிய ஒரு அரசியலமைப்பை கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மன்றம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

மாகாண சபைகளையும், அதிகாரப் பகிர்வையும் அறிமுகம் செய்யும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வாதப் பிரதிவாதங்கள் நடந்துவரும் நிலையில், அவற்றின் மூலம் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுள்ள ஆயர்களின் மன்றம், ஆனால் அதற்காக மக்களுக்கு அதிகமான அளவில் அரசில் பங்களிப்பை வழங்கும் மாகாண சபைகள் முறைகள் நீக்கப்படக் கூடாது என்றும், அது மாற்றியமைக்கப்படக் கூடாது என்றும் கேட்டுள்ளது.

ஆகவே இது தொடர்பில் புதிதாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துமாறும் அது அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

நாட்டில் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த விடயம் ஆறுதலாக கையாளப்பட வேண்டும் என்று ஆயர்கள் விரும்புவதாகக் கூறுகின்ற மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள், மாற்றப்படக் கூடிய புதிய அரசியலமைப்பு அனைத்து மதத்தவருக்குமான ஒரு இலங்கையை பரிந்துரைக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறினார்.

-BBC

TAGS: