சீரற்ற காலநிலை பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழப்பு

batticaloa_fishermenஇலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின்போது காணாமல் போயிருப்பவர்களில் 17 பேரைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.

அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.

TAGS: