மஇகா: இந்தியர்களுக்கான மெட்ரிகுலேசன் இடங்களை நிரப்புவீர்

1 micமெட்ரிகுலேசன் வகுப்புகளில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1500 இடங்களையும் கல்வி அமைச்சு நிரப்ப வேண்டும் என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் விரும்புகிறார்.

மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இடமளிக்கப்பட்டு அதை இந்திய மாணவர்களில் சிலர் நிராகரித்திருந்தால் அந்த இடங்களை மற்ற இந்திய மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் கூறினார்.

2013/2014 ஆண்டு மெட்ரிகுலேசன் இடங்களுக்கு 6,150 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததாகவும்  அவர்களில் 1,500 பேருக்கு இடம் அளிக்கப்பட்டு 890 பேர் மட்டுமே கொடுத்த இடங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது மாணவர் சேர்ப்பின்போது மேலும் 350 மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

“அவர்களில் எத்தனை பேர் கொடுக்கப்பட்ட இடங்களை ஏற்றார்கள் என்பது என்ற தகவல் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை”.

மெட்ரிகுலேசன் வகுப்புகளில் 1,500 இந்திய மாணவர்களுக்கு இடமளிக்கப்படுவதை வலியுறுத்தி மஇகா முறையீட்டுக் கடிதங்களை அனுப்பி இருப்பதாகவும் பழனிவேல் கூறினார்.