தாய்மொழிக்கல்விக்காக டோங் ஸோங் விடுத்த 728 பிரகடனம்

djz1

செம்பருத்தி.கோம்,

ஜூலை 27, 2013.

மலேசிய சீன மன்றங்கள் 728 ஒருங்கு கூடுதல்

கல்வி பெருந்திட்டம் 2013-2025 க்கு கண்டனம்

தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கு தீங்கானது

மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) ஏற்பாடு

பிரகடனம்

மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) நாடு தழுவிய அளவில் ஒரு கூட்டத்தை நடத்துகிறது. நாங்கள் முன்மொழியப்பட்டிருக்கும்  “மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 தொடக்க அறிக்கை”யை (இதன்கீழ் “பெருந்திட்டம்” என்று குறிப்பிடப்படும்) உறுதியாக எதிர்க்கிறோம் என்பதை இதன் மூலம் முறைப்படி அறிவிக்கிறோம். இத்திட்டம் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கும், தேசிய ஒற்றுமைக்கும் தீங்கானது என்று கருதப்படும் ஒரே மொழி கல்விக் கொள்கையைப் பரிந்துரைக்கிறது.

மலேசியா ஒரு பல்லின, பன்மொழி, பல கலாச்சாரம் மற்றும் பல சமயங்களைக் கொண்ட நாடு. இதனை அங்கீகரித்து, பன்மொழிக் கல்விக்கு தேவைப்படுபவற்றை கவனத்தில் கொள்ளும் கல்வி சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் அமல்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக, நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அதிகாரத்தினர் பல்வேறு இனப் பின்னணிகளைக் கொண்ட அனைத்து மலேசியர்களும் அவர்களுடைய தாய்மொழிகளைக் கற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் உரிய அவர்களின் உள்ளார்ந்த உரிமைகளை புறக்கணித்து விட்டு, நாட்டின் நடப்பு நிலைக்கு முரணாக, ஒரே மொழி கல்விக் கொள்கைகளைப் பரிந்துரைத்தனர். “1956 ரசாக் அறிக்கை” “ஒரே மொழி மற்றும் ஒரே கல்வி முறை” ஆகியவற்றை “இறுதிக் குறிக்கோள்” என்று முன்மொழிந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கைகள், கல்விச் சட்டங்கள் மற்றும் கல்வி மேம்பாட்டு பெருந்திட்டங்கள் அனைத்தும் இந்த “இறுதிக் குறிக்கோள்” இலக்கை அடையும் முயற்சியாக ஒரே மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தின. கல்வி பெருந்திட்டம் 2013 அந்த நடவடிக்களை திட்டமிட்டபடி விரைவுபடுத்துதல் வழி ஒரு படி மேலே சென்றுள்ளது.

 

பெருந்திட்டம் கீழ்காணும் ஒரே மொழி கல்வி கொள்கை நோக்கங்களை 2013 லிருந்து 2025 வரையில் மூன்று கட்டங்களாக வகுத்துள்ளது:

 

கட்டம் 1 (2013-2015): 2014 இல் தொடங்கி, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தேசிய தொடக்கப்பளிகளில் நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையில் போதிக்கப்படும் பகசா மலேசியா பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், போதனா முறைகள் மற்றும் தேர்வு முன்மாதிரி வடிவங்கள் ஆகியவற்றுக்குச் சமமான தரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக, சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் பகசா மலேசியா போதனைக்கான நேரத்தை கண்டிப்பாக வாரம் ஒன்றுக்கு 570 நிமிடங்களுக்கு அதிகரிக்க வேண்டும். இதனால், தாய்மொழி போதனைக்கான நேரம் வெறும் 300 நிமிடங்களுக்குக் குறைக்கப்படுகிறது. இந்நடவடிக்கை இப்பள்ளிகளின் பாடத்திட்ட கட்டமைப்பில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் விசாலமான தாய்மொழிக் கல்வி  வழங்கப்பட வேண்டும் என்ற அப்பள்ளிகளின் நோக்கம் கடுமையான ஆபத்திற்குள்ளாக்கப்படுவதோடு, பிற்காலத்தில் அப்பள்ளிகளின் அடிப்படைத் தன்மையை அடியோடு அழிந்துவிடும். 2016 ஆம் ஆண்டளவில், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தேசிய தொடக்கப்பள்ளிகள் ஆகிவிடும். அக்கட்டத்தில் புதுமுக வகுப்புகள் 2017 ஆண்டு வாக்கில் அகற்றப்படும்.

 

கட்டம் 2 (2016-2020): கல்வி அமைச்சின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் “மாணவர் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை செயல்திட்டங்கள்” சம்பந்தமான நடவடிக்களை வலுப்படுத்தும் கூறுகளை விதித்துள்ள அதே வேளையில், அந்நடவடிக்கைகளில் பங்கேற்கும் பள்ளிகள் அவற்றின் போதனை மொழிகளைத் தாராளாமாகப் பயன்படுத்துவது குறித்து மௌனமாக இருக்கிறது. இது நாட்டிலுள்ள சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்புகளை மேலும் அரித்து விடும்.

 

கட்டம் 3 (2021-2025): தேசிய தொடக்கப்பள்ளியும் தேசிய இடைநிலைப்பள்ளியும் பெற்றோர்களுக்கு முன்னுரிமைப் பள்ளிகள்.

 

பெருந்திட்டம், நியாயமாக மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடத்தப்பட வேண்டிய உரிமையைக் கொண்டுள்ள மக்கள் சமயப்பள்ளிகளை முழுமையாக  புறக்கணித்துள்ளது; தேசியமாதிரி பள்ளிகளுக்கும் மிஷன் பள்ளிகளுக்கும் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை;  சுயேட்சை சீன இடைநிலைப்பள்ளிகளின் தகுதியையும், கடந்த பல ஆண்டுகளாக அவை நாட்டிற்கு அளித்த பங்களிப்பையும் புறக்கணித்துள்ளது. இதன் நோக்கம் அப்பள்ளிகளை நாட்டின் தலையாய கல்வி அமைவுமுறையிலிருந்து தள்ளிவைப்பதாகும்.

 

பெருந்திட்டத்தின் நோக்கங்கள் அடையப்பெற்று விட்டால், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் எண்ணப்பட்டுவிடும். சீனக் கல்வி முற்றிலும் வேரறுக்கப்படும். சுயேட்சை சீன இடைநிலைப்பள்ளிகள் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும். இடைப்பட்ட காலத்தில்,  தேசியமாதிரி இடைநிலைப்பள்ளிகளும், மக்கள் சமயப்பள்ளிகளும், மிஷன் பள்ளிகளும் மெதுவாக நினைவிலிருந்து மறைந்துவிடும். தடுத்து நிறுத்தப்படாவிட்டால், பெருந்திட்டதினால் மலேசியாவில் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சீனக் கல்வி தீடிரென்று முடிவுக்கு வருவதோடு தாய்மொழிக் கல்வி கடந்தகால வரலாறு ஆகிவிடும்.

 

பெருந்திட்டத்தின் அமலாக்கம் நியாயமான கல்வி என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. அது தாய்மொழிக் கல்வியின் மேம்பாட்டிற்கும், தேசிய ஒற்றுமைக்கும், சமுதாய நல்லிணக்கத்திற்கும் தீங்கானதாகும். டோங் ஸோங்கை சேர்ந்த நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம் என்பதோடு இதன் மூலம் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வற்புறுத்துகிறோம்:

 

1. அதிகாரத்தினர், சம்பந்தப்பட்ட கல்விச் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்; ஒரே மொழி கல்விக் கொள்கையான “இறுதிக் குறிக்கோள்” அகற்றப்பட வேண்டும்; அனைத்து பள்ளிகளையும் சமமாக நடத்தும் சிறந்த பன்மையக் கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும்; அனைத்து இன மாணவர்களும் பயனடையக் கற்பிக்கும் பொருட்டு வேறுபட்ட கல்விப் பிரிவு பள்ளிகளும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி) பெற சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும்.

2. சீன தொடக்கப்பள்ளிகளில் மாண்டெரின் முதன்மையான போதனை மொழியாக இருக்கையில் பகசா மலேசியா கட்டாயப் பாடமாக இருக்கிறது.  தேசிய தொடக்கப்பள்ளிகளில் பின்பற்றப்படும் அதே தரத்திலான பகசா மலேசியா பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு ஆகியவற்றை சீன தொடக்கப்பள்ளிகளில் வலுக்கட்டாயமாக திணிக்கும் கொள்கையை அரசாங்கம் நீக்க வேண்டும். சீன தொடக்கப்பள்ளிகளில் பகசா மலேசியாவுக்கான வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம், ஏன்னென்றால், இது அப்பள்ளிகளின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்புகளைத் திருத்தி அமைத்துவிடும் என்பதோடு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், அவர்களின் சமநிலையான உடல் மற்றும் உள்ளத்தின் மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும்.

3. கல்வி அமைச்சு சீனப்பள்ளிகளில் இயங்கும் பள்ளி வாரியங்களின் தகுதியை கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு அவற்றின் தன்னாட்சி மற்றும் வழக்கமான செயல்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும், அப்போதுதான் அவை பள்ளிகளை திறமையாக நிருவகிக்கவும், அவற்றின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்புகளைப் பாதுகாக்கவும் இயலும் என்பதோடு உள்ளூர்வாசிகளோடு தொடர்பு கொண்டு சீனக் கல்வியின் முன்னேற்றத்தை மேலும் மேம்பாடடைய வகைசெய்ய இயலும்.

 

4. பொது நிதி ஒதுக்கீடுகள் வழங்க ஒரு நியாயமான, விவேகமான அமைவுமுறை ஏற்படுத்த வேண்டும்; சீன தொடக்கப்பள்ளிகள் கட்டுவதற்கு நிலம் தர வேண்டும்; இப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையத் தீர்க்க வேண்டும். அதே வேளையில், பாலர்பள்ளி வகுப்புகளும், சிறப்பு கல்வி வகுப்புகளும் மாண்டரின் மொழியில் சீனப்பள்ளிகளில் நடத்த வேண்டும். இதிலிருந்து சீன தொடக்கப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தேவையான இணக்கமான மாறுதல் ஏற்படும்.

 

5. சுயேட்சை சீன இடைநிலைப்பள்ளிகள் நாட்டின் மேம்பாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்; அதிகமான சுயேட்சை சீன இடைநிலைப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்வதை அமைப்பு முறையாக்க வேண்டும்; ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழுக்கு (யுஇசி) முழு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

 

6. தேசியமாதிரி இடைநிலைப்பள்ளியின் (எஸ்எம்ஜேகே) சட்டரீதியான தகுதியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். கடந்த காலத்தில் இப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

 

7. புதுமுக வகுப்புகள் தொடர்ந்து இருக்க வேண்டும்; அதன் பாடத்திட்டங்கள், ஆசிரியர்களின் கல்வி தகுதிகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திற்கு எளிதாக மாறுவதற்கு வழியாக மாணவர்களின் பகசா மலேசியா திறமையை உயர்த்த வேண்டும்.

 

தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்திருப்பதையே பாதிக்கின்ற தற்போதைய அபாயகரமான தாக்குதலின்  முழு வேகத்தையும் சீனக் கல்வி தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாங்கள் பல்வேறு இனப் பின்னணிகளைக் கொண்ட அனைத்து மலேசியர்களையும் எங்களோடு இணைந்திருக்குமாறு வற்புறுத்துகிறோம். இந்நாட்டில் பல்வேறு கல்வி பிரிவுகளின் மேம்பாட்டிற்கு சாதகமாகயிராத பெருந்திட்டம் அமல்படுத்தப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை திடமாக வற்புறுத்துவதற்கு நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

 

பல்வேறு கல்வி பிரிவுகள் விலைமதிப்பற்ற சொத்து என்றும், அவை நாட்டிற்கு பயன் தருகின்றவை என்றும், அவை நிலையற்ற தன்மைக்கும் ஒற்றுமையின்மைக்கும் அடிப்படைக் காரணம் அல்ல என்பதை நாங்கள் மீண்டும் கூறுகிறோம். ஒரே மொழி கல்விக் கொள்கைகளும் ஒருமயமாதலும் மக்களைப் பிளவுபடுத்துவதற்குத்தான் உதவியுள்ளது என்பது நிருபிக்கப்பட்டுள்ள வேளையில், பன்மையம், சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை பல்வேறு இனப் பின்னணிகளைக் கொண்ட மலேசியர்கள் ஒன்றுபட்டு இருப்பதோடு நல்லிணக்கத்தோடு வாழ்வதை உறுதிப்படுத்துகின்றன.

கல்வி கட்டளை 1957 இல் கூறப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கைப்படி கல்விப் பெருந்திட்டத்தை திருத்தம் செய்யும்படி நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அக்கட்டளையில், அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய, அவர்களுடையத் தேவைகளை நிறைவு செய்யும், அவர்களுடைய பண்பாடு, சமுதாய மற்றும் அரசியல் மேம்பாடு ஆகியவற்றுக்கு நாடு என்ற முறையில் ஆதரவு தந்து நிறைவேற உதவுவதற்கும்     தேசிய கல்வி அமைவுமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் நோக்கம் மலாய் மொழியை நாட்டின் தேசிய மொழியாக்குவதும், அதே வேளையில் நாட்டில் வாழும் மலாய்க்காரர்கள் அல்லாத மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அழியாது காப்பாற்றி அவற்றின் முன்னேற்றத்தைப் பேணிவளர்ப்பதுமாகும்.

 

 

 

TAGS: