நஜிப்பின் வருகையால் சிலாங்கூர் விழுமா?

லட்சுமணன்: கிள்ளானுக்கு நஜிப் வருவதைப்பற்றி அவ்வளவு விளம்பரங்கள், சிலாங்கூர் தேசிய முன்னணி விழுமா, கோமாளி?

கோமாளி: தம்பி லட்சு, நஜிப்பின் வருகைக்காக   சில மாதங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக அவரது வருகை இந்தியர்களின் வாக்கை பெறவேண்டும் என்பதே. கிள்ளான் வட்டாரத்தில் ம.இ.காவின் நிலை படுமோசமாக உள்ளது. எதிலும் ஊடுருவ இயலாத நிலையில், நஜிப் வருகைக்கு ஒரு மலாய் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடல் நீர்மட்ட அளவுக்கு குறைவான தரைமட்டத்தை கொண்டுள்ள பெரும்பகுதியான கிள்ளான், பாரிசான் ஆட்சி காலத்தில் வெகுவாக புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். அங்கு வாழும் இந்தியர்களின் ஒட்டு மொத்த சமூக-பொருளாதார சூழல், குறைந்த சம்பளம்-சமூக பிரச்னை சார்புடையது. அதேவேளை கிள்ளான் துறைமுக வரியற்ற வாணிப மையம் (PKFZ), துறைமுக பட்டு வாடா வணிகம் போன்றவை வழி கோடிக்கணக்கான பணம் தேசிய முன்னணி சார்புடைய நபர்களால் சூரையாடப்பட்டது. துறைமுகத்தை கொண்ட கிள்ளான், நல்ல வளர்ச்சியை கொண்ட நகரமாக இருக்க வேண்டியது. ஆனால், சீரமைப்பும் மேம்பாடும் இல்லாத கசக்கிப்பிழியப்பட்ட நிலையில் கிள்ளானில் எஞ்சியிருப்பது ஏமாற்றத்தை தாங்கி இருக்கும் மக்கள் மட்டுமே. கடல் மட்டம் அதிரித்தால் பெரும்பகுதியில் வெள்ளம் ஏற்படும் சூழலும் உள்ளது.

இந்நிலையில் நஜிப்பின் வருகை, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் உள்ளது. மக்களிடம் எஞ்சியுள்ள வாக்குரிமையை பறிக்க நடத்தும் நாடகமாகவே இது தோன்றுகிறது. நஜிப் வருகையால், சிலாங்கூர் விழாது. மக்களும் விழ மாட்டார்கள். நஜிப் விழாமல் இருக்க உறுதியான மேடையிருந்தாலே போதும் என்ற நிலைதான் உள்ளது.