பாபியா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ராபிஸி அம்பலப்படுத்துவார்

1989ம் ஆண்டுக்கான பாபியா என்ற வங்கிகள், நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி இஸ்மாயில் அந்தச் சட்டம் எப்படி நேர்மையற்ற முறையில் அமலாக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறார்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பாக தாம் ஆவணங்களை ஆய்வு செய்த போது பல வங்கி நிறுவனங்கள் சட்டத்தை நான்கு வகையாக மீறியுள்ளதைக் கண்டு பிடித்ததாக அவர் சொன்னார்.

“ஆகவே இரண்டு வழக்குகள் இப்போது நிகழ்கின்றன. ஒன்று நீதிமன்றத்தில் இருக்கிறது. இன்னொன்றை நாங்கள் பொது மக்களுக்கு அம்பலப்படுத்துவோம். மக்கள் நலனுக்காக பாபியா சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் காட்டுவோம்.”

அந்தச் சட்டத்தை மீறும் பொருளகங்களினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பலர் கருதுகின்றனர்,” என அவர் இன்று ஷா அலாம் நீதி மன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

என்எப்சி  நிதி ஆவணங்கள் பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்ததாக ராபிஸி மீதும் பப்ளிக் பாங்க் ஊழியருமான ஜொஹாரி முகமட் மீது ஆகஸ்ட் முதல் தேதி கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தாம் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது நல்லதாக அமைந்து விட்டது என்றும் ராபிஸி சொன்னார். ஏனெனில் அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தம்முடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.

வங்கி நிறுவனங்கள் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தப்படுவதை (அதிகாரிகள் அவற்றை புறக்கணித்துள்ளனர்) அம்பலப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

“எங்கள் இயக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும். என்எப்சி விஷயத்தில் பாபியா சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள வேளையில் அதே கவனத்தைப் பெறாத பல சம்பவங்களும் இருக்கின்றன,” என்றார் ராபிஸி.

விசாரணை தொடங்கிய நான்கு வாரங்களுக்கு பின்னர் NOW எனப்படும் தேசிய தகவல்களை அம்பலப்படுத்துவோர்,, கண்காணிப்போர் மய்யத்தை அவர் அமைத்தார்.

தகவல்களை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை சீர்திருத்துவதற்கு அந்த மய்யம் முக்கியமாகப் போராடும்.

 

TAGS: