தமிழ்ப்பாடமும் தலைவலியும்!

தமிழ்மொழி நம் நாட்டில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. தமிழ்ப்பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், சமூக இயக்கங்களில், அரசியல் இயக்கங்களில், தனியார் கல்லூரிகளில் இன்னமும் தமிழ் வாழ்கின்றது. இக்கூற்று ஒரு மறுக்க முடியாத உண்மைகளாகும். அண்மைக் காலத்தில் நமது துணைப் பிரதமர் கூறிய வாசகங்கள் பலருக்கு தலையைச் சுற்ற ஆரம்பித்து விட்டது. தேசிய ஆரம்ப பள்ளிகளில் தமிழையும் சீன மொழியையும் கட்டாயப் பாடமாக்குவது என்பதே தலை வலிக்கான ஆரம்பம்.

துணைப் பிரதமர் கூற்றை வரவேற்போம். அது தேர்தல் சகாப்தமா? உண்மையிலேயே நமக்காக அவர் நன்மை செய்ய வருகின்றாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் எது வேண்டுமென்றாலும் சொல்லட்டும். அதை ஏற்றுக் கொள்ளப்போகின்றோமா அல்லது எதிர்க்கப்போகின்றோமா என்பது அடுத்த கட்ட நடவடிக்கை. அதற்கு முன் நமது நாட்டில் எத்தனை தமிழ்மொழிச் சார்ந்த இயக்கங்கள் இருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்த்தால்… ஐய்யகோ எண்ணில் அடங்கா!

தமிழ் அறவாரியம், தமிழ் முன்னேற்றக் கழகம், தமிழ் காப்பகம், தமிழ் மொழிக் கழகம், தமிழ் ஆசிரியர் மன்றம், இடை நிலைப்பள்ளி ஆசிரியர் மன்றம், தலைமை ஆசிரியர் மன்றம் என்று பலப் பல இயக்கங்கள்… இவை எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாத விளங்காத விசயமாக இருக்கின்றது. ஆனால் பல கருத்துக்கள் அனல் பறக்கின்றன. பலர் எதிர்க்கின்றார்கள். பலர் ஆதரிக்கின்றார்கள். எதை நாம் எடுத்துக் கொள்வது? துணைப் பிரதமரின் கூற்றை ஆராய்வதற்காகவாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா என்பதே இங்கு கேள்வி.

என்னைக் கேட்டால்….

எனக்கு இந்த கூற்றுக்கு கீஞ்சிற்றும் உடன்பாடில்லை. தமிழை வேறு வழியில் வளர்க்கலாம் என்போர் ஒரு புறம் இருக்க இதனால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை நாம் நிதானமாக ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மை நன்கு புலப்படும். தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற பொன்மொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.

துணைப் பிரதமரின் கூற்றுக்கு கருத்துச் சொல்வதைவிட ஆய்வு மேற்கொள்வது சால பொருத்தமான செயலாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆகவே தமிழ்ச் சார்ந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆய்வு செய்து, பட்டிமன்றம் நடத்தி, பட்டறைகள் செய்து பிறகு முடிவு தருவது நல்ல செயலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவர்கள் ஒன்று சேர்வார்களா? படித்தவர்கள் என பெயர் பெற்றோர் ஒருங்கிணைந்து ஒரு நல்ல முடிவைத் தருவார்களா? ஒரு சாரார் முடிவு என்று இல்லாமல் ஒருங்கிணைந்த முடிவாக இருப்பின் இலாபம் நமக்கே. விளைவுகள் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

இன்னும் 20 வருடங்களில் தமிழை அழித்த, அரித்த பாவம் நம்மைச் சாராதிருக்க வேண்டும். வரும் தலைமுறை நாம் செய்த அல்லது எடுத்த முடிவிற்கு சாபம் கொடுக்காமல் வாழ்த்த வேண்டும். அது நிகழுமா? காலம் பதில் சொல்லட்டும். நமது தலைவர்கள், இயக்கங்கள் பதில் பேசட்டும்.

——————————————————

எழுத்து : கணேசன் ஆறுமுகம்