பெட்டாலிங் ஜெயா மேயர் திடீர் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மட் ரோஸ்லான் சகிமான் 24 மணி நேரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அறிந்து சிலாங்கூர் அரசு வியப்படைகிறது.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரோனி லியு, தமக்கும் மந்திரி புசார் அலுவலகத்துக்கும் அது பற்றி எதுவும் தெரியாது என்றார்.

“அது ஐயத்துக்குரியதாகவும் வழக்கத்துக்கு மாறானதாகவும் உள்ளது.அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், 24 மணி நேரத்தில் அதைச் செய்யும் அவசியம் என்ன வந்தது?இது நிர்வாகத்துக்கு இடையூறாக இருக்குமே”, என்று அவரைத் தொடர்புகொண்டபோது லியு கூறினார்.

2006-இல், பெட்டாலிங் ஜெயா மாநராண்மைக் கழகப் பொறுப்பை ஏற்ற முகம்மட் ரோஸ்லான் (இடம்) திறம்பட பணியாற்றி வந்துள்ளார் என லியு தெரிவித்தார்.

“ஒரு மனிதர் மோசமாக எதையும், செய்திருந்தால் தவிர திடீர் மாற்றம் செய்யக்கூடாது. இப்படி இடமாற்றம் செய்வது எம்பிபிஜே ஊழியர்களின் உணர்வைக் கெடுக்கும்”, என்றார்.

இடமாற்றத்துக்குக் காரணங்களை ஆராய அவர் தயாராக இல்லை. அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா அது பற்றி பெட்டாலிங் ஜெயா மக்களுக்கு விளக்கம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார் என்றார்.

’பிஎஸ்டி ஆணை’

முகம்மட் ரோஸ்லானைத் தொடர்புகொண்டு பேசியபோது சிலாங்கூர் மாநிலத் துணைச் செயலாளர் பதவிக்கு பொதுச் சேவைத் துறை (பிஎஸ்டி) தம்மை மாற்றி இருப்பதாகத் தெரிவித்தார்.

உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறிய 24 மணிநேரத்தில் எம்பிபிஜே-இலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டதாக சொல்வதை மறுத்தார்.

“அரசு ஊழியர் என்ற முறையில் பிஎஸ்டி போகச் சோன்னால் போக வேண்டியதுதான்.ஆனால், அந்த (திடீர் மாற்றம் என்ற)ச் செய்திதான் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை”,என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அடுத்து செய்ய வேண்டியது பற்றி மாநிலச் செயலாளரைத்தான் கேட்க வேண்டும். அவர் விடுப்பில் இருப்பதாக தெரிகிறது.அதனால், அங்கு செல்ல சில நாள்கள் ஆகலாம்”, என்றார்.

எம்பிபிஜே கவுன்சிலர் டெரெக் பெர்னாண்டஸ், இந்த இடமாற்றம் “சட்டவிரோதமானது” “அதிகாரவரம்பு மீறியது” என்றார்.

“1976ஆம் ஆண்டு ஊராட்சி சட்டத்தின்படி மேயர் சிலாங்கூர் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவர். பிஎஸ்டி தன்மூப்பாக முடிவு செய்ய இயலாது”, என்றார்.

மாநில அரசிடம் ஆலோசனை கலந்திருக்க வேண்டும் என்றாரவர்.

TAGS: