கல்வி செயல்திட்டம் ‘இனவெறி, மதவெறிக்குத் தீர்வு காணவில்லை’

பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, கல்வி செயல்திட்டம், தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து மெளனம் சாதிப்பதைக் குறை கூறியுள்ளார்.

அம்னோ அரசியலின் பிரதிபலிப்பாக அப்பள்ளிகளில் இனவாதமும் சமயவாதமும் மண்டிக்கிடக்கின்றன என்றாரவர்.

“அந்த விவகாரங்கள் தேசியப் பள்ளிகளிலும் உண்டு”. ஆனால் அவற்றை ஒழிப்பதற்கு செயல்திட்டம் வழி கூறவில்லை.

“அது ஆங்கிலம், பஹாசா மலேசியா கற்பதை (மட்டும்) வலியுறுத்துகிறது.ஓரினத்தன்மை பற்றியும் பேசுகிறது”.இராமசாமி பினாங்குக் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘தேசிய கல்வி செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளல்’ கருத்தரங்கில் பேசியபோது இவ்வாறு கூறினார்.

அக்கருத்தரங்கில், பினாங்குக் கழகத்தின் தோ கின் வூன், செனட்டர் அரிபின் ஒமார், கொள்கை உருவாக்க மையத்தின் இயக்குனர் லிம் டெக் கீ, சமூக ஆர்வலர் வொங் சின் ஹுவாட் ஆகியோரும் பேசினர்.

இராமசாமி, அச்செயல்திட்டத்தை ஒரு “தேர்தல் ஆவணம்” என்று வருணித்தார்.செயல்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தும் அரசியல் உறுதிப்பாட்டைக் காண விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயல்திட்டத்துக்கும் அதைப்போன்ற மற்ற ஆவணங்களுக்குமிடையில் வேறுபாட்டைப் பார்க்க முடியவில்லை என்று கூறிய இராமசாமி, அதைப் போலவே கல்வி அமைச்சர் முகைதின் யாசினும் மற்ற அமைச்சர்களிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை என்றாரவர்.

பெருமுயற்சியில் உருவான செயல்திட்டம் “மலேசியக் கல்வியின் அடிப்படை பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளாதது… ஒரு அவப்பேறு”, என்றாரவர்

கருத்தரங்கில் பேசிய லிம், செயல்திட்டம் முதல்பார்வையில் கவர்கிறது என்றாலும் நுணுகிப் பார்க்கையில் அது அரைகுறையானதாக, குறைபாடுடையதாக உள்ளது என்றார். திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் அவசரத்தை அது காண்பிக்கவில்லை.

“அதைச் செயல்படுத்துவதில் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமோ என்ற அச்சத்தையும் கவலையையும் அது போக்கவில்லை”,என்றும் லிம் கூறினார்..என்றாலும் அது “அப்படி ஒன்றும் மோசமான வரைவு அல்ல”, என்றாரவர்

அண்மையில் முகைதினால் அறிவிக்கப்பட்ட அந்தக் கல்வி செயல்திட்டம், தொடக்க, இடைநிலைப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கம் கொண்டது.

மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு வரையப்பட்ட திட்டம் அது. என்றாலும் அது பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

சுருக்க வடிவத்தில் மட்டுமே அது கிடைக்கிறது.