எண்ணெய் உரிமப் பணம்: தீர்ப்பை செவிமடுக்க சிவப்பு நிற உடைகளில் கிளந்தான் மக்கள்

எண்ணெய் உரிமப் பணம் மீதான கிளந்தான் மாநில அரசாங்கக் கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு அனுமதி கோரி செய்து கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பம் மீதான தீர்ப்பைச் செவிமடுப்பதற்காக ஆயிரக்கணக்கான கிளந்தான் ஆதரவாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒன்று திரண்டனர்.

அவர்களில் பலர் சிவப்பு நிற டி சட்டைகளை அணிந்திருந்தனர். அதன் பின்புறத்தில் ‘R’ என்ற சொல் ( உரிமப் பணத்தைக் குறிக்கும் வகையில்) எழுதப்பட்டிருந்தது. அவர்கள் கிழக்குக் கடலோர மாநிலத்திலிருந்து பல கார்களில் அங்கு வந்தனர்.

Gabungan Profesional Tuntut Royalti, Pendaratan Minyak dan Gas ke Negeri Kelantan (Royalti) என்ற அமைப்பு அதற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் மூவாயிரம் பேர் பங்கு கொண்டதாக அந்த அமைப்பு கூறியது. ஆனால் ஆயிரம் பேர் இருக்கலாம் எனப் போலீஸ் மதிப்பிட்டது.

எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் ஆதரவாளர்கள் நீதிமன்ற முடிவுக்கு அமைதியாகக் காத்திருந்தனர். பெரும்பாலோர் படம் எடுத்துக் கொண்டனர். அமைதியாக இருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அடிக்கடி ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

காலை ஆறு மணி தொடக்கம் காத்திருந்த ஆதரவாளர்கள் பதாதைகளையும் சுவரொட்டிகளையும் ஏந்தியிருந்தனர்.

அவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் “எண்ணெய், எரி வாயு எங்கள் கௌரவம்”, “எங்கள் உரிமைகள் திருடப்பட்டுள்ளன”, 1974ம் ஆண்டு முதல் பாரபட்சம்” (இது 1974ம் ஆண்டு பெட்ரோலியச் சட்டத்தைக் குறித்தது) என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்தன.

இதனிடையே வழக்குத் தொடருவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுதின் ஹசான் அறிவித்த போது “Takbir!”என முழக்கமிடப்பட்டது.

அப்போது அமைதியாக இருக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கூடியிருந்தவர்களை மீண்டும் வேண்டிக் கொண்டனர்.

“இந்த முடிவு இறுதியானது இல்லை என்றாலும் உரிமப் பணத்துக்கான கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி,” என அவர் சொன்னார்.

அந்த வெற்றி எளிதாகக் கிடைக்கவில்லை என இன்னொரு ஆட்சி மன்ற உறுப்பினரான ஹுசாம் மூசா சொன்னார்.

“முதலில் எல்லாம் இருட்டாக இருந்தது. (எண்ணெய் உரிமப் பணத்துக்கான) திரங்கானு வழக்கில் பெட்ரோனாஸ் ஒர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து போராடுகின்றது,” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“ஆனால் பெட்ரோனாஸ் இன்று நமது வழக்கை ஆட்சேபிக்கவில்லை. அது நமது வழக்குரைஞரின் விண்ணப்பத்துக்கு ஒப்புக் கொண்டது,” என ஹுசாம் சொன்னார்.

கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டுக்கு நீதிமன்ற முடிவு குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

காலை மணி 10.30 வாக்கில் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் எண்ணெய் உரிமப் பணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் மகஜர் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் கொடுப்பதற்காக ஐவர் கொண்ட குழு பிரதமர் அலுவலகத்துக்குப் புறப்பட்டது.

அந்த மகஜரில் மொத்தம் 160,000 கையெழுத்துக்களைக் கொண்டுள்ளது. அந்த எண்ணிக்கை கிளந்தான் மக்கள் தொகையில் பத்து விழுக்காடு ஆகும்.