அன்வாரின் ‘பொருளாதாரத் திறமையின்மை’யைக் கேலி செய்தார் முகைதின்

பக்காத்தான் நிழல் பட்ஜெட், பற்றாக் குறையைக் குறைக்கும் என்று கூறுவது அக்கூட்டணிக்குப் “பொருளாதார அறிவு போதாது” என்பதைத்தான் காட்டுகிறது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.

இன்று சிலாங்கூர்,ஷா ஆலமில் என்ஜிஓ மற்றும் மாணவர் தலைவர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கல்ந்துகொண்ட முகைதின், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியப் பொருளாதாரம் பற்றி அறியாமல் பேசுகிறார் என்றார்.

“அவர் (மத்திய அரசு) எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் பக்காத்தான் பட்ஜெட் பற்றாக்குறையில் ரிம20பில்லியனைக் குறைக்கும் என்றும் சொன்னார்.

“உண்மை என்னவென்றால் அவர்கள் ஒன்றும் நிபுணர்கள் அல்லர். அவர்கள் அரசாங்கத்தில் இல்லை. அதனால் பொருளாதார நிலையை அறிய மாட்டார்கள்”, என்றார்.

அன்வார், முன்னாள் நிதி அமைச்சர்.அத்துடன் 2004-இல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிதி (பிடிபிடிஎன்)யை எடுக்க வேண்டும் என்ற பிகேஆரின் பரிந்துரை பற்றிக் குறிப்பிட்ட முகைதின்,  அதை நடைமுறைப்படுத்தினால் பலர் உயர் கல்விக்குக் கடன் பெற முடியாமல் போகும் என்றார்.

“பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதே வருங்காலத்தில் கடன் வாங்குவோருக்கும் அது பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான். அதை எடுத்துவிட்டால் நம் பிள்ளைகளுக்கு அந்த நிதி கிடைக்காது போகும்”.

TAGS: