ஜாஹிட்: சுவாராம் மீது நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் ஏஜியைப் பொறுத்தது

அரசாங்கம், சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்)-வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகத்திடமே விட்டுவிடும்.

இதனைத் தெரிவித்த தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அரசாங்கம் இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கிய விவகாரம் பற்றி நாடாளுமன்றத்திலும் பல செய்தியாளர் கூட்டங்களிலும் தாம் விளக்கம் அளித்துள்ள போதிலும் அதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக் சுவாராம் ஓயாது கூறிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

“திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். அக்கொள்முதல் நிதி அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டது என்று நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

“அவர்கள் (சுவாராம்) மற்றவர்களின் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல முயல்வதாகவே எனக்குப் படுகிறது. அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். உண்மைகளின் அடிப்படையில்தான் அறிக்கைகள் விடுக்க வேண்டும்”, என்று பாகான் டத்தோவில் உலா வந்தபோது ஜஹிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

TAGS: