சோரோஸையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை; சைபுடின் திட்டவட்டம்

உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, எதற்காக ஜார்ஜ் சோரோஸ்மீது இத்தனை தாக்குதல்கள் என்று கேள்வி கேட்டதற்காக தம்மைக் குறைகூறிய சகாக்களுக்கும் அம்னோ ஆதரவாளர்களுக்கும் தாம் அந்த யூதக் கோடீஸ்வரரையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“நான் சோரோஸ் அல்லது சுவாராமை ஆதரிக்கவில்லை. சோரோஸை அல்லது சுவாராமைத் தற்காத்துப் பேசியதுமில்லை.அறிவார்ந்த முறையில் அமைந்த புதிய அரசியல் கோணத்திலிருந்து என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்.

“நம் அரசியல் எதிர்ப்பு அரசியலாக உள்ளது. இது நமக்கிடையே பகைமையை வளர்க்கும் அளவுக்குப் போய்விடுகிறது”, என்று சைபுடின் கூறியதாக மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் குறிப்பிட்டுள்ளது. 

13பொதுத் தேர்தலின் முடிவு பெருமளவுக்கு நடுத்தர மக்களும் இளம் வாக்காளர்களும் நிபுணர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் என்பதால் அரசியல் விவாதங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றாரவர்.

“30 விழுக்காட்டு வாக்காளர்கள் அந்த வகையினர் என்றும் அவர்கள் கருத்துகளையும் கொள்கைகளையும் அடிப்படையாக வைத்தே முடிவு செய்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அளவுமீறிய அரசியல் சாடல்களில் அவர்களுக்கு ஈர்ப்பில்லை.

“அவர்கள் அரசியலில் தாக்குதல்கள், சாடல்கள் எல்லாம் உண்டு என்பதை அறிந்தவர்கள்தான். ஆனால் அது அளவுமீறிச் செல்வதை, எடுத்துக்காட்டுக்கு தனிப்பட்ட விவகாரங்களை வைத்து தாக்குவது, சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே பொதுவில் தீர்ப்பளிப்பது போன்றவை அவர்களுக்குப் பிடிப்பதில்லை”, என்றவர் விளக்கினார்.

கடந்த வாரம் மலேசியாகினியிடம் பேசிய சைபுடின், சோரோஸ்  மலேசியாவில் கைப்பாவை அரசை அமைக்க விரும்புகிறார் என்று குற்றஞ்சாட்டுவது பிஎன்னையே திருப்பித் தாக்கலாம் என்று எச்சரித்திருந்தார்.

பிஎன்னின் சிறப்பைப் பேச வேண்டும்

தம்மைப் பொறுத்தவரை பக்காத்தான் ரக்யாட்டை, சோரோஸை அல்லது சுவாராமைக் குறைசொல்வதைவிட பிஎன்னின் “சிறப்புகளை” எடுத்துரைக்கவே விரும்புவதாகக் கூறினார்.

சைபுடின் அப்படிச் சொன்னது அவரின் சகாக்களும் அம்னோ ஆதரவாளர் சிலருக்கும்  பிடிக்கவில்லை. சைபுடின் தம் சொந்த அரசியல் நலனைக் காத்துக்கொள்ள தம்மைத் தாராள மனமுள்ளவர்போல் காண்பித்துக்கொள்கிறார் என்று கண்டனம் செய்தனர்.

சைபுடினுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன்னும் வெல்லும் என்ற நம்பிக்கை இல்லை அதனால் தம்மைத் தாராள மனம் கொண்ட தலைவர்போல் காண்பித்துக்கொண்டு மாற்றுக்கட்சிகளிடம் “ஆயுள் காப்புறுதி” எடுத்துக்கொள்ள விரும்புகிறார் என்று முகம்மட் ஜாஹிட் முகம்மட் அரிப், சினார் ஹரியானிடம் கூறியிருந்தார்.

இன்றைய உத்துசான் மலேசியாவில், அம்னோ ஆதரவு அமைப்பான கெராக்கான் ரீபோர்மாசி மலேசியாவின் தலைவர் ரம்லான் அபு பக்கார், “இரண்டு-முக அரசியல்” வேண்டாம் என்று சைபுடினுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேசியப் பாதுகாப்புக்கும் அரசியல் விவகாரத்துக்கும் வேறுபாடு காணத் தெரியாத சைபுடின் பதவி விலக வேண்டும் என்று ரம்லான் குறிப்பிட்டார்.

“எதிரிகளாகக் கருத வேண்டியவர்களை எல்லாம் நண்பர்களாகக் கருதும் போக்கு நீண்ட காலமாகவே சைபுடினிடம் இருந்து வருகிறது. அவருக்கென்று உறுதியான அரசியல் நிலைப்பாடு இல்லை என்பதால் பாதுகாப்பான பாதையில் பயணம் செய்ய விரும்புகிறார்”, என்றாரவர்.