இஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா

உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசிய நிறுவனங்கள் ஆணைய (சிசிஎம்) த்தைக் கொண்டு சுவாரா இனிஷியேடிப் சென் பெர்ஹாட் மீது விசாரணை மேற்கொண்டதன்வழி தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதால் அவரின் சம்பளத்தில் ரிம10 ரிங்கிட்டைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி எம்பி டோனி புவா தீர்மானம் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

பரிசான் நேசனலின் அரசியல் நலனுக்காக அவர் சுவாரா இனிஷியேடிப் கணக்குகளை விசாரணை செய்ய உத்தரவிட்டார் என்பதால் அத்தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

“மறுபுறம், 2007-இலிருந்து ஐந்து அம்னோ-தொடர்பு நிறுவனங்கள் கணக்குகளைக் காட்டவில்லை, அவற்றுக்கு எதிராக அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

“அந்த நிறுவனங்களில்  ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின் கோத்தா பெலிட் எம்பி அப்துல் ரஹ்மான் ஜமாலுடின் டஹ்லான் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்”, என்று புவா கூறினார்.

அவ்விருவரும் இயக்குனர்களாக உள்ள ஒய்ஜிபி ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் 2006-இலிருந்து கணக்குகளைக் காண்பிக்கவில்லை. ஆனால், அதற்கு எதிராக நடவடிக்கை இல்லை.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது சிசிஎம் நடவடிக்கை எடுப்பது அரிதாகவுள்ளது என்று தலைமைக்  கணக்காய்வாளர் அறிக்கையும் கூறுகிறது.

“அவற்றுக்கு எதிராக சிசிஎம் செயல்படாமலிருப்பதையும் அம்னோ-தொடர்பு நிறுவனங்கள் சட்டமீறல் புரிந்திருந்தாலும் அவை மீது வழக்கு தொடுக்கப்படாத காரணத்தையும் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.

TAGS: