சொய் லெக்: ஹூடுட்டைக் கொண்டுள்ள நாடுகள் பின்தங்கியுள்ளன

ஹூடுட்டைப் பின்பற்றும் 11 நாடுகளில் எட்டு நாடுகள் ஊழல்மிக்கவையாக, நிலைத்தன்மையற்றனவாக, பாதுகாப்பற்றவையாகக் கருதப்படுகின்றன என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார்.

அந்ந்நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. “ பாஸின் ஹூடுட், குற்றச்செயல்களையும் ஊழல்களையும் குறைக்கும் என்று முஸ்லாம்-அல்லாதரிடம் சொல்லிச் சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளது டிஏபி. ஆனால் அது இன்னொரு மகா பொய்யாகும்”,என்றாரவர்.

இன்று காலை விஸ்மா எம்சிஏ-இல், மசீச ஆண்டுக்கூட்டத்தில் சுவா உரையாற்றினார். 45-நிமிட உரையில் புதிய கொள்கை என்று எதையும் அவர் குறிப்பிடவில்லை.

மாறாக, அவரது பேச்சு முழுக்க மாற்றரசுக் கட்சியைத் தாக்குவதும், கூட்டத்திற்கு வந்திருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தூக்குவதுமாகவே இருந்தது.

முதலில் ஹூடுட்டைத் தாக்கினார். பக்காத்தான் ரக்யாட்டின் சுலோகமான ‘Ubah (மாற்றம்)’-வைச் சுட்டிக்காட்டி அது   Untuk Bentuk Agama dan Hudud ala PAS (சமய உருவாக்கத்துக்கும் பாஸ் பாணி ஹூடுட்டுக்கும்) என்பதன் சுருக்கம் என்றார்

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் பாஸின் ஹூடுட்டை எதிர்நோக்க வேண்டியிருக்கும். டிஏபி, பாஸைக் கட்டுப்படுத்தி வைக்கும் என்று நம்ப முடியாது என்றார்.

இவ்விசயத்தில் பிகேஆர் நடப்பில் தலைவர் வாயைத் திறப்பதில்லை என்று குறிப்பிட்ட சுவா, அவர் தம் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்  என்றார்.

பக்காத்தான் பட்ஜெட்டில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்றவர் குறை கூறினார்.

“பக்காத்தானைப் பொறுத்தவரை இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறது. பின்னால் வரப்போகும் குழப்பநிலை பற்றிக் கவலைப்படவில்லை.

“308(மார்ச் 8,2008)-இலிருந்து வெறுப்புக் கொள்கையைத்தான் பக்காத்தான் கடைப்பிடித்து வருகிறது. எல்லா விவகாரங்களையும் அரசியலாக்கி விடுகிறார்கள். பிஎன் அரசையும் தலைவர்களையும் வெறுக்குமாறு மக்களைத் தூண்டி விடுகிறார்கள்”, என்றாரவர்.

TAGS: