வழக்கு ஒன்றில் ரோனி லியூ-வும் கிர் தோயோ-வும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்கள் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு கண்டுள்ளன.

என்றாலும் அந்தத் தீர்வு விவரங்கள் நாளை உயர் நீதிமன்ற நீதிபதி நிக் ஹாஸ்மாட் நிக் முகமட் முன்னிலலையில் திறந்த நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என லியூ-வின் வழக்குரைஞரான முகமட் ஹைஜான் ஒமார் கூறினார்.

“தீர்வு விவரங்களை முடிவு செய்ய விசாரணை நாளை தள்ளி வைக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்,’ என கிர் தோயோவின் வழக்குரைஞரான எம் ஆதிமூலன் கூறினார்.

மேல் விவரங்களைத் தருவதற்கு எல்லாத் தரப்புக்களும் மறுத்து விட்டன.

அந்த அவதூறு வழக்கு இன்று தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லியூ-வும் கிர் தோயோ-வும் இன்று தொடக்கம் சாட்சியமளிக்கவிருந்தனர்.

2008ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி கிர் தோயோ நடத்திய நிருபர்கள் சந்திப்பைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ரோனி 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி அவதூறு வழக்கைத் தொடுத்தார்.

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விபச்சார எதிர்ப்பு சோதனைக்குத் தாம் தடையாக இருந்ததாக பிரதிவாதி கூறிக் கொண்டதாகவும் ஊராட்சி விவகாரங்களுக்கு பொறுப்பான ஆட்சி உறுப்பினராக பணியாற்றுவதற்குத் தமக்கு உள்ள தகுதி பற்றியும் கேள்வி எழுப்பியதாகவும் வாதி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.