அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு

முறையீட்டு நீதிமன்றம், மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரீபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தள்ளிவைத்துள்ளது.

ஏற்கனவே, ஜூலையிலிருந்து ஆகஸ்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட அவ்வழக்கு அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய நாள்களில் விசாரிக்கப்படுவதாக இருந்தது.

தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரியின் வழக்குரைஞர் ஹஸ்மான் அஹ்மட்டை நேற்று தொடர்புகொண்டு பேசியபோது வழக்கு காலவரையறையின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதாவது விசாரணைக்குப் புதிதாக நாள் எதுவும் குறிக்கப்படவில்லை.

தள்ளிவைப்புக்குக் காரணம் கேட்டு மலேசியாகினி அனுப்பிய குறுஞ்செய்திக்கு ஹஸ்மானிடமிருந்து பதில் இல்லை.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அஸிலாவும், லான்ஸ் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமரும் 2006 அக்டோபரிலிருந்து சிறையில் கிடந்து வாடுகிறார்கள்.

இருவரும் அல்டான்துயாவைக் கொன்றதாக தீர்ப்பளிக்கப்பட்டு 2009, ஏப்ரலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

இந்தப் புதிய தள்ளிவைப்பு வினோதமாகவுள்ளது. ஏனென்றால், கடந்த வாரம்தான் சிருலின் வழக்குரைஞர்கள் கமருல் ஹிஷாம் கமருடினும் ஹஸ்னால் ரிஸ்வா மரைக்கானும் திட்டப்படி வழக்கு விசாரணைக்கு வரும் என்று உறுதியாகக் கூறியிருந்தனர்.

விசாரணையை மேலும். தள்ளிவைக்க இடமளிக்கப்படாது என்று நீதிமன்றமே எச்சரித்திருப்பதாக ஹஸ்னால் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

அஸிலா, சிருல் ஆகியோருடன் கொலைக்கு உடந்தை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டாமீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அவர் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார். அதுபோக, வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மட் ஸாக்கி முகம்மட் யாசின் தம் தீர்ப்பில், கொலைக்கான நோக்கத்தை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டதுதான் மிகப் பெரிய மர்மமாக இருந்தது.

இதனிடையே, வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவதன்வழி மரண தண்டனை கைதிகளைச் சிறையில் போட்டு வாட்டி வதைப்பது கொடூரமான செயல் என்று மனித உரிமை ஆணைய(சுஹாகாம்) உறுப்பினர் காவ் லேக் டீ(வலம்) கூறினார்.

“அது அனைத்துலக மனித உரிமையின் 5-ஆம் விதியை மீறும் செயலாகும்”, என்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளராக இருக்கும் காவ் கூறினார்.

மனித உரிமைப் பணிகளில் ஈடுபாடுள்ள வழக்குரைஞரான எண்ட்ரு கூ, மலேசிய சட்டத்தில்  மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கு காலவரையறை எதுவும் கிடையாது என்றார்.

சில வேளைகளில் மேல்முறையீடு விசாரணைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் சிறையில் கிடக்க வேண்டியதுதான் என்றார்.