அன்வார்: பண்டார் துன் ரசாக் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சிலாங்கூர் மந்திரி புசார் போட்டியிடுவார்

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார்.

அந்தத் தகவலை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

அவர் இன்று காலை பல சிலாங்கூர் பிரச்னைகள் பற்றி சுங்கை பெசியில் கூட்டம் ஒன்றில் பேசினார்.

“பண்டார் துன் ரசாக் மக்கள் தலாம் பிரச்னையை அறிந்திருக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.

“ஏனெனில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக தான் ஸ்ரீ காலித்தை நான் மீண்டும் முன்மொழிவேன் என்பதை பக்காத்தான் ராக்யாட் சார்பில் நான் இன்று அறிவித்துக் கொள்கிறேன்,” என 300 பேர் பங்கு கொண்ட அந்தக் கூட்டத்தில் கூறினார். அப்போது பலத்த கைதட்டல் எழுந்தது.

நிறுவனத் தலைவர் என்ற முறையிலும் இப்போது மந்திரி புசார் என்ற முறையிலும் அவர் பெருமளவிலான பணத்தை நிர்வாகம் செய்யும் போது அவர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை. அதனால் தாம் காலித் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக அன்வார் தொடர்ந்து சொன்னார்.