பள்ளியில் சமய போதனை குறித்து பேசக்கூடாது என்று தடையா?

கிளந்தான், குவாங் மூசாவுக்கு அருகில் போஸ் பிஹயிலுள்ள எஸ்கே பிஹய் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் அவர்களுக்கு பள்ளியில் சமய பாடம் போதிக்கப்பட்டது குறித்து பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் கூறிக்கொண்டார்.

கடந்த வாரம் துவா ஓதாமல் இருந்ததற்காக நான்கு முஸ்லிம் அல்லாத ஓராங் அஸ்லி மாணவர்கள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரும் அது குறித்து கேட்டபோது மாணவர்கள் மௌனமாக இருந்தனர் என்றாரவர்.

“ஒரு வேளை வீட்டில் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லக்கூடாது என்று ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்திருக்கலாம். அதுதான் எங்களுடைய சந்தேகம்”, என்று எஸ்கே பிஹய் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் அரோம் அசிர் கூறினார்.

சமய போதனை சில காலமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், பெற்றோர்களுக்கு இந்த அறைச்சல் சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அது குறித்து எதுவும் தெரியாது என்று அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.

இச்சம்பவத்தில், அறையப்பட்ட மாணவிகள் வீட்டிற்கு ஓடிச்சென்று தாங்கள் அறையப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள், அவரும் உட்பட, ஆசிரியரை எதிர்கொள்ள பள்ளிக்குச் சென்றனர்.

“அவர் (ஆசிரியர்) கூறினார், ‘ஆம். அது எனது உரிமை. நான் ஓர் ஆசிரியர். நான் இந்த மாணவர்களுக்கு போதிக்க முடியும்.

“ஆனால், எங்களுக்கு திருப்தி இல்லை ஏனென்றால் அவர் சமயம் போதிக்க விரும்புகிறார். சமயப் பாடம் போதிக்கப்படுவதற்கு முன்பு பள்ளி இது குறித்த தகவலை மறைக்காமல் வெளிப்படையாக அளிக்க வேண்டும்”, என்று பாதிக்கப்பட்ட மூவருக்கு உறவினரான அரோம் கூறினார்.

பூர்வீக குடிமக்கள் சட்டம் 1954, செக்சன் 17(2) இன் கீழ் பெற்றோர் முன் அனுமதியின்றி ஒரு பூர்வீக குழந்தை எந்த ஒரு சமய போதனைக்கும் உட்படுத்தக்கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.