மலேசியாகினி: எங்கள் செய்தியாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துங்கள்

Mk - Hamidi3சுயேட்சை செய்தி இணையதளத்தின் செய்தியாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை மலேசியாகினி கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் நலன் கருதி கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை செய்தியாளர்களுக்கு உண்டு. அக்கேள்விகளுக்கு பதில் கூறும் கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசியாகினியை கூட்டாக தோற்றுவித்தவர்களான பிரமேஷ் சந்திரனும் ஸ்டீவன் கானும் இன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஸாகிட் நடந்து கொண்ட விதம் “ஓர் அமைச்சரின் தகுதிக்கு ஏற்றதல்ல” என்று அவ்விருவரும் அவர்களின் கூட்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மலேசியாகினி அவர் கூறியவற்றை “திரித்து” கூறியது என்று வசைபாடிய ஹமிடி செய்தியாளர் லாரன்ஸ் யோங்கை செய்தியாளர் கூட்டம் முடிந்த பின்னர் எதிர்கொண்டார்.

“மலேசியாகினி அவரது அறிக்கைகளை தவறாக வெளியிட்டது என்று அமைச்சர் கருதினால் அவர் எங்களுடன் தொடர்பு கொண்டு திருத்தம் கோரலாம்”‘ என்று மலேசியாகினியின் தலைமை நிருவாகி பிரமேஷ்சும் தலைமை-பொறுப்பு ஆசிரியர் ஸ்டீவன் கானும் கூறினர்.

Mk - Hamidi5“நாங்கள் அவரிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று அவர் கருதினால், நாங்கள் அவரையோ, இதர அமைச்சர்களையோ சந்தித்து நாங்கள் வெளியிட்ட செய்தி பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம். இன்று வரை, அவரிடமிருந்தோ, அவரது அலுவலகத்திடமிருந்தோ எந்தப் புகாரையும் பெறவில்லை.”

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்களை அவர்களின் செயல்களுக்கு பொறுப்புடையவர்களாக்குவது செய்தியாளர்களின் வேலை என்று அவ்விருவரும் அமைச்சருக்கு நினைவூட்டினர்.

“குற்றச்செயல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு இல்லாமை அதிகரித்து வருகிறது என்ற தோற்றம் உருவாகியுள்ள இவ்வேளையில், போலிசாரின் நடத்தை கடுமையான விவகாரமாகியுள்ளது. இது குறித்த மக்களின் அச்சத்தை உள்துறை அமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவற்றுக்கு ஏற்ற பதில் அளிக்க வெஎண்டும்”, என்று அவ்விருவரும் மேலும் கூறினர்.

செய்திகளை “திரித்து” வெளியிடுகிறது என்று ஸாகிட் மலேசியாகினி மீது குற்றம் சாட்டியது இது முதல் தடவையல்ல.Mk - Hamidi4

உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் நடத்திய முதல் செய்தியாளர் கூட்டத்தில் “மலேசியாகினியின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு வாக்கியத்தையும், ஒவ்வொரு பத்தியையும், ஒவ்வொரு செய்தியையும்” கண்காணித்து வருவதாக ஹமிடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ஹமிடியின் தாக்குதலை அமைதியாகவும் தன் நிலையை விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொண்ட செய்தியாளர் லாரன்ஸ் யோங்கை மலேசியாகினியின் ஆசிரியர் ஃபதி அரிஸ்ஒமார் வெகுவாகப் பாராட்டினார்.

தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2012 இல் கூறப்பட்டுள்ள ரிம1.3 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களையும் இதர பொருளகளையும் போலீசார் இழந்துள்ளது குறித்து லாரன்ஸ் யோங் உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கோர முயற்சித்தார் என்று ஃபதி கூறினார்.

அம்னோ அனைத்து ஊடகங்களையும் நியாயமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில் அம்னோ மட்டுமே அதன் நிகழ்ச்சிகள், குறிப்பாக அதன் உச்சமன்ற கூட்ட நிகழ்ச்சிகள், குறித்த செய்திகளை சேகரிப்பதற்கு மலேசியாகினிக்கு தடை விதித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.