மலேசியா நாடாளுமன்றம் பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மேலானது, காசிம்

UMNO-Minister-Shahidanபிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் “சொரசொரப்பற்ற விவாதங்கள்” நடத்தப்படுவதற்கான வசதிகள்  தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் “மேஜைகள் கூட இல்லை”, என்றாரவர்.

“அவர்களது அமைச்சர்கள் பதில் அளிக்கையில், அவர்கள் வெறுமனே எழுந்து நின்று விவாதிக்கின்றனர். அங்கு எழுதவோ முறையாக வாசிக்கவோ வசதிகள் இல்லை” என்று பிகேஆர் அஸ்மின் அலியின் துணைக் கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறினார்.

விவாதங்கள் நடத்துவதற்கு மிகச் சிறந்த வசதிகளை வழங்குவதில் மலேசிய நாடாளுமன்றம்தான் மிகச் சிறந்தது என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகைப்பிற்கிடையே காசிம் கூறினார்.

(இது மட்டுமல்ல. நாடாளுமன்ற முறையை பிரிட்டீஷாருக்கு கற்றுக் கொடுத்ததே நாங்கள்தான். ஆங்கிலம் கூட நாங்கள்தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். எங்களுடைய மலேசிய நாடாளுமன்றம் “போச்சோராகி” ஒழுகியதைப் போல் பிரிட்டீஷ் நாடாளுமன்றம் போச்சோராகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம். மலாயாவை கைப்பற்றி இந்தியர்களையும் சீனர்களையும் இலட்சக்கணக்கில் கொண்டு வந்து வெப்ப மண்டல காடான  இந்நாட்டை மேம்படுத்தி வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை எங்களிடம் மட்டும் கொடுத்து விடுங்கள் என்று பிரிட்டீஷாருக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கியதே நாங்கள்தான் என்று ஷகிடான் காசிம் கூறினாலும் ஆச்சரியப்படக்கூடாது.

அதுமட்டுமல்ல. உலகில் தோன்றிய முதல் இனமே நாங்கள்தான் என்றும் அவர் கூறக்கூடும். நகைப்பிற்கு பஞ்சமே இருக்காது!)