உலகத் தலைவர்களுக்கு இருட்டில் தீனி போட்டால், தின்னவாமாட்டார்கள்?

najib_deepavali-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 25, 2013.

பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவிற்கான மின்சார செலவு பல மில்லியன் ரிங்கிட் ஆகியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதால் நியுசிலாந்து நாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்து விருந்து வைத்து விருந்தாளிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் பழக்கமும் பெருந்தன்மையும் கொண்ட பிரதமர் நஜிப் வருத்தமடைந்துள்ளார்.

உலகத் தலைவர்களை இருளில் உட்கார வைத்து உணவு உட்கொள்ளச் செய்வதா என்று கேட்கிறார்.

ஏன், இருட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் உணவு உள்ளே போகாதா? உலக மக்களில் எத்தனை மில்லியன் கணக்கான மக்கள் இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள்தானே இங்கு வருகிறார்கள். அவர்களுடைய மக்கள் அனுபவிப்பதை அவர்கள் இங்கு அனுபவித்தால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்?

ஏன் மலேசியாவின் அனைத்து மூலைமுடுக்களிலும் வாழும் மக்கள் அனைவரும் கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்கொளியில்தான் உணவு உட்கொள்கிறார்களா?

பிரதமர் நஜிப் அவர் தரத்திலான உலகத் தலைவர்களுக்கு இருட்டறையில் உணவு கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தவில்லை. ரிம2.2 மில்லியன் அதிகமானது என்றுதான் சுட்டிக் காட்டினர்.

ஜிஎஸ்டி வரி போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் நாடு திவாலாகி விடும் என்று ஆளுங்கட்சியினர் ஓலமிடுகின்றனர். இப்படி செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது என்பதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம்.

சீனாவின் அதிபர் மாவ் ஸே டோங் அவரது கோட்டின் கிழிந்து போய்விட்ட கைப் பகுதியை மட்டும் அகற்றி பழுதுபார்த்த பின்னர் அக்கோட்டை பயன்படுத்தி வந்தார். அவரது கையைக் குலுக்கிய தமது தந்தை அதைப் பற்றி தம்மிடம் கூறவில்லையே நஜிப் திருப்பி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமது நாட்டில் சட்டை இல்லாமல் வாழும் 30 கோடி (அன்றையக் கணக்கின்படி) மக்கள் சட்டை அணிகிற வரையில் சட்டை போட மாட்டேன் என்று கூறி பிரிட்டீஷ் பேரரசின் சக்ரவர்த்தியைக் கூட சட்டை அணியாமல் சந்தித்த ஒரு அரை நிர்வாண பக்கிரி நமது காலத்தில் வாழ்ந்திருக்கிறார்!

குடிசையில் கடைசிக்காலம் வரையில் வாழ்ந்த அந்த அரை நிர்வாண பக்கிரிக்குஉலகம் எழுந்து நின்று மரியாதை செய்தது.

மக்களுக்கு முன்னுரிமை என்று வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் தமிழர்கள் (ஒரு காலத்தில்)மக்களுக்கு அளித்த  Rosmahமுன்னுரிமை தத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோள் உயரும் என்பது தமிழர்களின்  ஜனநாயக தத்துவமாகும்.

மக்களுக்கு போதுமான மின்சார வசதியிருந்தால், பிரதமருக்கு ஏன் இவ்வளவு என்று கேட்கமாட்டார்கள். குடி உயர்ந்தால், கோள் தானாகவே உயரும்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட மின்சார செலவு சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு இவ்வளவு வேகமாக பதில் கேள்வி கேட்ட பிரதமர் நஜிப், அரசாங்க ஜெட் விமானத்தை கும்மாளம் போட அவரது துணைவியார் பயன்படுத்தப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏன் இன்னும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை?

TAGS: