ஹூடுட் திட்டங்கள் குறித்து பிகேஆருக்கும் டிஎபிக்கும் பாஸ் விளக்கம் அளித்தது

 

Pas - Explainsஇன்று பாஸ் பிரதிநிதிகள் பிகேஆர் மற்றும் டிஎபி தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II சட்டம் 1993 ஐ அமல்படுத்தும் அதன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

பாஸ் தரப்பில் கிளந்தான் மந்திரிபுசார் அஹமட் யாக்கோப், துணை மந்திரி புசார் முகமட் நிக் அஹமட் அப்துல்லா, பாஸ் குழு உறுப்பினர்கள் டுசுல்கிப்ளி அஹமட், டாக்டர் ஹத்தா ரமலி மற்றும் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆகியோர் பங்கேற்றனர். முஸ்தாபா கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார்.

பிகேஆர் சார்பில் உதவித் தலைவர் தியான் சுவா, தலைமைப் பொருளாளர் வில்லியம் லியோங் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் சிவராசா ராசையாவும், டிஎபியை பிரதிநிதித்து துணைத் தலைவர் தெரசா கோ மற்றும் குழு உறுப்பினர்கள் லியுவ் சின் தோங், ஸைரி கிர் ஜொஹாரி மற்றும் ஓங் கியன் மிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டம் கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிவுற்ற பின்னர், “நாங்கள் அவர்களுக்கு அளித்த விளக்கத்திலிருந்து, எல்லாம் ஆக்கமுறையானதாகத் தெரிகிறது… கிளந்தான் அரசு செய்துள்ளதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் அக்கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. அதனை நாங்கள் மதிக்கிறோம்”, முகமட் நிக் அமர் ஹராக்காவிடம் கூறினார்.

“ஏதோ ஒரு வகையில், எங்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். வேறுபாடுகள் இருப்பதெல்லா வழக்கமானதே. இதில் முக்கியமானது என்னவென்றால் பக்கத்தான் பங்காளிகள் ஒருவரை ஒருவர் மதிப்பதுதான்”, என்று அவர் மேலும் கூறினார்.

மசீசவுக்கும் விளக்கம் அளிக்கப்படும்

பாஸ் கட்சி பிஎன் உறுப்புக் கட்சிகளையும், மசீச உட்பட, சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புகிறது என்றாரவர்.

கிளந்தான் மாநில அரசின் ஹூடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு தாம் பாஸ் கட்சிக்கு உதவப் போவதாக பிரதமர்துறை இலாகா அமைச்சர் ஜமில் கிர் பஹாரும் கூறியதைத் தொடர்ந்து ஹூடுட் மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது.

கிளந்தான் இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் திருட்டு குற்றங்களுக்கு உடலுறுப்புகளைத் துண்டித்தல் மற்றும் விபச்சாரம் போன்றவற்றுக்கு கல்லால் அடித்துக் கொல்லுதல் ஆகிய தண்டனைகளுக்கு வகை செய்கிறது.

மலாய் வாக்காளர்களுடன் மோதல்

மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் பாஸ் சிரமத்தை எதிர்பார்ப்பதாக தெரசா கோ மலேசியகினியிடம் கூறினார்.

“பாஸ் கட்சி டிஎபியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அம்னோ கிராமப்புற மக்களிடம் கூறி வருகிறது.

“ஹூடுட் சட்டம் அமலாக்கம் குறித்து அம்னோ தங்களுக்கு சவால் விடுவதால் தாங்கள் மௌனமாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். தாங்கள் எதிர்வினையாற்றாவிட்டால், அவர்கள் இன்னும் அதிகமான வாக்குகளை இழக்க நேரிடும் என்று கருதுகின்றனர்”, என்றார் தெரசா.

பிகேஆரும் டிஎபியும் மலேசியா மற்றும் பக்கத்தான் கூட்டணியின் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பாஸிடம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

எது எப்படி இருப்பினும், பக்கத்தான் இவ்விவகாரத்தால் பிளவுபட்டுவிடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, இக்கூட்டம் ஒரு “பொது விவாதம்” மட்டுமே என்று சிவராசா கூறினார்.

“எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”, என்று அவர் சுருக்கமாக பதில் அளித்தார்.

 

 

TAGS: