தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு போக்கஸ்-எ இணையதள வழி கற்றல் திட்டம்

 

4x2 (2pcs) bannerதமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் போக்கஸ்-எ இணையதள வழி கற்றல் (Focus-A E-Learning) செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிரியேட்டிவ் டிரீம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் மலேசிய தமிழ் அறவாரியம் ஆகியவை இணைந்து உருவாக்கியதாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் 80 விழுக்காடு தேர்வு நிலையை அடைய வேண்டும் என்ற தமிழ் அறவாரியத்தின் நோக்கத்தை செயல்படுத்த இந்த இணையதள வழி கற்றல் பேருதவியாக இருக்கும். எந்த ஒரு மாணவனும் அடையும் ஒரு குறைந்த விழுக்காடு முன்னேற்றமும் நமது தமிழ்ப்பள்ளிகளுக்கும் நமது இலட்சியத்திற்கும் பெரும் முன்னேற்றமாகும் என்று தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் குமாரி உஷாரானி ஓர் அறிக்கையில் கூறினார்.

நமது மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவான இந்த போக்ஸ்-எ இணையதள வழி கற்றல் செயல்திட்டம் கற்பித்தல் மற்றும் தனிப்பட்ட போதனை முறைகளை மேம்படுத்தக்கூடியது. இது கற்பதற்கான வழிமுறைகளில் மிக அண்மையானது என்பதோடு ஆசிரியர்கள் மாணவர்களின் அன்றாட முன்னேற்றத்தை அடைவுநிலை அட்டையின் வழி கண்காணிக்க உதவுகிறது. இத்திட்டத்தை “மலேசிய புத்தாக்கம்” என்று மோஸ்டி (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு) அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கு எம்எஸ்சி தகுதியும் வழங்கப்பட்டுள்ளது என்று உஷா விளக்கம் அளித்தர்.

தொடக்கமாக, இத்திட்டம் கணினி ஆய்வுக்கூடம் மற்றும் இணையதள வசதிகளைக் கொண்டுள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

இத்திட்டத்தை பள்ளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாளை (மே15, 2014) வியாழக்கிழமை காலை மணி 10.00 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில் CDI HQ, Unit 516, 5th Floor, Block E, Phileo Damansara 1, Section 16, PJ. (beside EASTIN Hotel & STAR building) என்ற இடத்தில் நடைபெறும்.

கணினி ஆய்வுக்கூடம் மற்றும் இணையதள வசதிகள் இல்லாத தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றன.

துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்கிறார்.

மேற்கொண்டு தகவல் பெறுவதற்கு குமாரி உஷாரானி 016-9700765 மற்றும் தமிழ் அறவாரியம் 03-2692 6533 ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.