பெர்சே என்றால் கொதித்துப் போகும் ஜாஹிட் ‘சிகப்புச் சட்டை’ குறித்து கருத்துரைக்காதது ஏன்?

gungசிகப்புச்  சட்டை  பெர்சே-எதிர்ப்புப்  பேரணியில் தடையின்றிக்  கலந்துகொள்ள  அம்னோ  உறுப்பினர்களுக்கு துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  அனுமதி  அளித்திருப்பது  குறித்து  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர் லிம்  கிட்  சியாங்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

“பெர்சே 4 பேரணில்  கலந்துகொள்வோர்  தண்டிக்கப்படுவார்கள் என  மிரட்டிய  ஜாஹிட், இப்போது  சிகப்புச்  சட்டைப்  பேரணியில்  கலந்துகொள்வது ‘அம்னோ  உறுப்பினர்களின்  தனிப்பட்ட  உரிமை’ என்று  பேசுவது  ஏன்  என்று  விளக்குவாரா?”, என  லிம் இன்று  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

உள்துறை  அமைச்சருமான  ஜாஹிட்,  அம்னோ  உறுப்பினர்கள்  பெர்சே- எதிர்ப்புப்  பேரணியில்  கலந்துகொள்வதைத்  தடுக்கப்போவதில்லை  என்றும்  அது  அவர்களின்  தனிப்பட்ட  உரிமை  என்றும்  நேற்றுக்  கூறினார்.

பேரணிக்கு  ஏற்பாடு  செய்துள்ள  என்ஜிஓ  அம்னோவை  அழைக்கலாம்  ஆனால், அரசாங்கம்  பேரணியில்  சம்பந்தப்படாது  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

“இதில் அரசாங்கம்  கருத்துரைக்க  விரும்பவில்லை. நடவடிக்கை  எடுக்கும்  பொறுப்பை  முழுக்க  முழுக்க போலீசிடமே  விட்டு  விடுகிறோம். அனுமதி  கொடுப்பது,  அனுமதி  கொடுத்தால்  அங்கு  அமலாக்கப்  பணிகளை  மேற்கொள்வது  எல்லாமே  அவர்களின்  பொறுப்பு”, என்று  ஹமிடி  கூறினார்.

பெர்சே  4  பேரணிக்குக்  கடுமையாகக்  கண்டனம்  தெரிவித்த  ஜாஹிட் இப்போது  கருத்துரைக்க  தயங்குவது  ஏன்  என்று  லிம்  வினவினார்.

“இதே  ஜாஹிட்தான்  பெர்சே 4 பேரணி  ஏற்பாட்டாளர்களுக்கும்  பங்கேற்பாளர்களுக்கும்  எதிராகக்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  திரும்பத்  திரும்ப  எச்சரித்தார்.  பெர்சே  டி-சட்டைகளுக்குத்  தடை விதிக்கும்  உத்தரவில்   கையொப்பமிட்டவரும்  இவரேதான்.

“அரசாங்கம்  சிகப்புச்  சட்டைப்  பேரணி  குறித்து   ‘கருத்துரைக்க  எதுவுமில்லை’ என்று கூறுவது  ஏன்? பெர்சே  4  பேரணியைக்   கண்டிப்பதில்  அவ்வளவு  தீவிரம்  காட்டினாரே அவர் (ஜாஹிட்)”, என  லிம்  கூறினார்.