பாஸ் ஆதரவாளர் மன்றம் ஆயர் பூத்தேயில் குவான் எங்கை எதிர்த்து போட்டியிடும்

dhppபாஸ்  ஆதரவாளர்  மன்றம் (டிஎச்பிபி),  அடுத்த  பொதுத்  தேர்தலில் பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான் எங்கை  எதிர்த்து அவரது  மாநிலச்  சட்டமன்றத்  தொகுதியான  ஆயர்  பூத்தேயில்  களமிறங்கத்  தயாராக  உள்ளது.

பாஸ்  அத்தொகுதியில் ஒருவரைக்  களமிறக்க  முடிவு  செய்தால் தாங்கள்  அதற்கு ஆயத்தமாக இருப்பதாக டிஎச்பிபி  தலைவர் என். பாலசுப்ரமணியம்  கூறினார்.

“நாங்கள்  தயார். கட்சி  சொல்வதை  அப்படியே  பின்பற்றுவோம்.

“பல  தேர்தல்களில்  தோற்ற  அனுபவம்  உண்டு. அதனால்  பயம்  இல்லை”, என  பாலசுப்ரமணியம்  கூறினார்.

14வது  பொதுத்  தேர்தலில்  டிஏபி  போட்டியிடும்  இடங்களில் மலாய்க்காரர்-அல்லாத  வேட்பாளர்களைக்  களமிறக்கப்  போவதாக  பாஸ்  தலைவர் அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறியதை  அடுத்து ஆயர்  பூத்தே-இல்  போட்டியிட  வருமாறு  லிம்  பாஸுக்கு  நேற்று   அழைப்பு  விடுத்திருந்தார்.

டிஎச்பிபி,  13வது  பொதுத்  தேர்தலில்  ஆயர்  ஹித்தாம்  நாடாளுமன்றத்  தொகுதி,  ஜோகூரில்  திராம்  மாநிலச் சட்டமன்றத்  தொகுதி, மலாக்கா அசாகான்  சட்டமன்றத்  தொகுதி  ஆகியவற்றில்  மூன்று  வேட்பாளர்களைக்  களமிறக்கியது. மூவருமே  தோற்றுப் போனார்கள்.