நஜிப் போன்ற நண்பர் ஒபாமாவுக்குத் தேவையில்லை என்கிறது வாஷிங்டன் போஸ்ட்

friபிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சூழ்ந்துள்ள  பல்வேறு  ஊழல்களைச்  சுட்டிக்காட்டும்  வாஷிங்டன்  போஸ்ட்  அவரைவிட்டு   ஒபாமா  நிர்வாகம்  விலகி  இருப்பதே  நல்லது  என  நினைக்கிறது.

ரிம2.6 பில்லியன்  ‘நன்கொடை’  விவகாரத்தில்  நஜிப்  குற்றம்  எதுவும்  புரியவில்லை  என  மலேசியாவின்  சட்டத்துறைத்  தலைவர்  கூறி  இருந்தாலும்  நஜிப்பால்  உருவாக்கப்பட்ட  1எம்டிபியில்  நிதி முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதை  மற்ற  நாடுகளின்  புலன்  விசாரணைகள்  தொடர்ந்து  அம்பலப்படுத்திக்  கொண்டிருப்பதாக    போஸ்ட்  நேற்று  அதன்  தலையங்கத்தில்  குறிப்பிட்டிருந்தது.

“மலேசிய  ஊழலில்  ஐக்கிய  அரபு  அமீரகம், சவூதி  அராபியா,  சிங்கப்பூர்,,அமெரிக்கா  ஆகிய  நாடுகளின்  நிதியாளர்களும்  மேற்கத்திய  பெரிய  வங்கிகள்  சிலவும்  சம்பந்தப்பட்டிருக்கலாம்  எனத்  தோன்றுகிறது.

“முக்கியமாக  நஜிப்பே  சட்ட,  அரசியல்  விளைவுகளை  எதிர்நோக்கும்   சாத்தியமும்  இருப்பதுபோலத்  தோன்றுகிறது”,  என  தலையங்கம்  கூறிற்று.

நஜிப்  அடக்குமுறையைப்  பயன்படுத்திக்  குற்றச்சாட்டுகளை  ஒடுக்கப்பார்க்கிறார்  என்று  போஸ்ட்  கூறியது.  முகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  நீக்கப்பட்டதையும்  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேலின்    பணிக்காலம்   திடீரென்று  முடிவுக்குக்  கொண்டு  வரப்பட்டதையும்  எந்த  நிந்தனைச்  சட்டத்தை  அகற்றப்போவதாக  முன்பு  நஜிப்  வாக்குறுதி  அளித்திருந்தாரோ  அந்த  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  15 பேர்  குற்றம்  சாட்டப்பட்டிருப்பதையும்  அது  சுட்டிக்காட்டியது.

“இவையெல்லாம்  தோல்வி  காணும்   முயற்சியாகவே  தெரிகிறது. மலேசிய  விசாரணையாளர்களைத்  தடுக்க  முடிந்தாலும்  மற்ற  நாட்டைச்  சேர்ந்தவர்கள்  தொடர்ந்து  முயன்று  பணம்  எப்படி  திசை  திருப்பி  விடப்பட்டது  என்பதை  அம்பலப்படுத்துவார்கள்”, என  அந்த  நாளேடு  கூறிற்று.