வாசிப்புக் கலாச்சாரம்

 

– கி.சீலதாஸ்,  ஜூன் 8, 2017.  

siladassபுத்தகம்  வாசிப்பது  சிறந்த  பழக்கங்களில்  ஒன்றெனின்,  அது  வெறும்  கவர்ச்சியான  கூற்றன்று.  புகழ்மிக்க  சட்ட  நிபுணரும்  தத்துவஞானியுமான  ஃபிரன்சிஸ்  பேக்கன்,  “வாசிக்கும்  பழக்கம்  ஒருவரை  முழு  மனிதனாக்குகிறது”, என்று  பதினேழாம்  நூற்றாண்டில்  எழுதினார்.  வாசிக்கும்  ஆற்றலைக்  கொண்டிருப்பவர்  பல  மொழிகளில்  படைக்கப்பட்ட  இலக்கியங்களோடு  உறவு  கொண்டு  அறிவை  வளர்த்துக்  கொள்ள  முடியும்.  பல  கலாச்சாரங்களைப்  பற்றியும்  மற்ற  இனத்தவர்களைப்  பற்றியும்  அவர்களின்  வாழ்க்கைமுறைகளைப்  பற்றியும்  தெரிந்துகொள்ளலாம்.  அவ்வாறு  தெரிந்திருப்பது  பரஸ்பர  நல்லிணக்கத்திற்கு  உதவும்.  “எல்லா  நல்ல  புத்தகங்களைப்  படிக்கும்போது  கடந்து  சென்ற  நூற்றாண்டுகளின்  அற்புதங்களோடு  உரையாடுவது  போலிருக்கும்”,  என்றார்  ஃபிரான்ஸ்  நாட்டின்  தத்துவஞானி டெகார்ட் (Descartes),  “வாழ்,  நாளை  மரிக்கப்போவதாக  எண்ணி  வாழ்,  என்றென்றும்  வாழப்போவதாக  நினைத்து  வாசி”  என்கிறது  மத்தியக்கிழக்குப்  பொன்மொழி  ஒன்று.  “பிறநாட்டு  மொழிகளைத்  தெரியாதவர்கள்   அவர்களின்  சொந்த  மொழியைப்  பற்றி  ஒன்றும்  தெரியாதவர்கள்”,  என்கிறார்   ஜெர்மன்  நாட்டு  இலக்கியப்  படைப்பாளரும்,  அரசத்தந்திரியுமான  கேட்டா(Goethe).

வாசிப்பதின்  முக்கியத்துவத்தை  உணர்ந்தவர்கள்  அந்தப்  பழக்கம்  பரவவேண்டும்  என்பதில்  உன்னிப்பாக  இருப்பர்.  செல்வந்தர்களான  கற்றவர்கள் – கற்றதன்  பலன்  தங்களிடமே  நிலைத்துவிடவேண்டும்  என்றிருந்துவிட்ட  காலமும்  உண்டு.  பிரசுர  இயந்திரங்கள்  அறிமுகமானப்  பிறகு  அச்சிடப்பட்டு  வெளியாகும்  புத்தகங்களின்  எண்ணிக்கை  பெருகத்  தொடங்கியது.  அப்பொழுதும்  புத்தகங்களின்  விலை   சாதாரணமானவர்களுக்கு  எட்டும்  அளவுக்கு   இல்லை.  நூல்நிலையங்கள்  அமைக்கப்பட்டன,  இதனால்  வாசிக்கும்  பழக்கம்  பரவியது.  இருபதாம்  நூற்றாண்டின்  முற்பகுதியில்   புத்தகங்களை  அச்சிட்டு  மலிவான  விலையில்  மக்களுக்கு  சேரும்படி  நினைத்தனர்  இருவர்.  ஒருவர்  இந்தியர்,  அவர் வி.கே கிருஷ்ண மேனன்.  மற்றவர்  ஆங்கிலேயர்,  எலன் லேன்.

வி.கே.கிருஷ்ண மேனன்  இங்கிலாந்துக்குப்    படிக்கப்போனவர்.  நெடுங்காலம்  அங்கேயே  தங்கிவிட்டார்.  சட்ட  நிபுணரான  அவர்  பிரிட்டிஷ்  தொழிற்கட்சியில்  இணைந்து  நகராண்மைக்  கழகத்திற்கு  தேர்வு  பெற்றார்.  பதினான்கு  ஆண்டுகள்   அவர்  நகராண்மைக்  கழக  உறுப்பினராகச்  சேவையாற்றினார்.  இந்தியா  விடுதலை  பெற்றப்  பிறகு  அதன்  தற்காப்பு  அமைச்சராகவும்  சேவையாற்றினார்.

penguin1935ஆம்  ஆண்டில்  கிருஷ்ண  மேனனும்  எலன்  லேன்  இருவரும்  கூடி  பெங்குயின் (Penguin)  என்ற  நிறுவனத்தை   அமைத்தனர்.  அது  மலிவு  புத்தகங்களைப்  பிரசுரித்தது  அவர்கள்   இருவரும்  மற்றொரு  நிறுவனத்தையும்  அமைத்தனர்.  அது  பெலிக்கன் (Pelican).  சில  ஆண்டுகளுக்குப்  பிறகு  அவர்கள்  பிரிந்தனர். (காண்க:  ஜானகிராம்Pelican  எழுதிய வி.கே.கிருஷ்ண மேனன் – ஆங்கில  பதிப்பு).  பெங்குயின் மற்றும்  பெலிக்கன்  அமைப்புகள்   இன்றும்  புகழோடு  இயங்குகின்றன.  அவற்றின்  சேவை  இன்றியமையாததாகும்.  எனவே,  மக்கள்  வாசிக்கும்  பழக்கத்தைக்  கைவிடக்கூடாது  என்ற   உன்னத  நோக்கோடு  கிருஷ்ண  மேனனும்  லெனி  எலனும்  செயல்பட்ட  முறை  பாராட்டிற்கு  உரியது  என்பது  ஒரு  பக்கம்  இருக்கட்டும்.  அவர்களின்  உண்மையான  நோக்கம்  என்னவாக  இருந்திருக்கும்?  சுருக்கமாகச்  சொல்லவேண்டுமாயின்,  வரலாற்று  உண்மைகள்  மறைக்கப்பட்ட  காலம்  ஒன்று  இருந்தது.  அவ்வாறு  நடந்து  கொண்ட  ஏகாதிபத்தியவாதிகள்  அவர்களின்  வெற்றி,  அவர்களின்  மொழி,   அவர்களின்  சமயம்,  அவர்களின்  கலாச்சாரம்  யாவும்  சிறந்தவை,  மற்றவை  வெறும்  குப்பையே  என்ற  எண்ணத்தை  வளர்த்தார்கள்,  பரப்பினார்கள்.  பொதுஅறிவு  உண்மைகளை,  தகவல்களை  அறிந்து  கொள்ள  வாய்ப்பில்லாத  காலகட்டத்தில்  மக்கள்  படித்தவர்கள்   சொன்னதை  நம்பி  ஏமாந்து வாழ்ந்தார்கள்.  அதைத்  தகர்க்கும்  பொருட்டு  உருவான  கலாச்சாரம்,   போற்றப்பட்ட  கலாச்சாரம்,  வாசிக்கும்  கலாச்சாரம்.  அதற்கு  உந்துகோலாக  அமைந்திருந்தது  மேனன் – லேன்  இருவரின்  பணி. இன்று  பல  உண்மைகள்  வெளிவருவதற்கு  ஏதுவாக  அமைந்திருப்பது  பற்பல  வரலாற்று  ஆய்வுகள்    நூல்களின்  பிரவேசமே.  அவற்றை  வாசிக்க  வேண்டும்.  அபொழுதுதான்  அறிவு  வளர்ச்சியை  மூடிமறைத்துக்கொண்டிருக்கும்  இருள்  நீங்கும்,  தெளிவான  அறிவும்  ஞானமும்  மலரும்.