உச்சநிலையில் கேலி வதை – கே.பாலமுருகன்


உச்சநிலையில் கேலி வதை – கே.பாலமுருகன்

Slide2கேலி வதையின் கொடூரமான முகம் கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார்.

மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற வன்கொடுமையாளர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அனைத்து சூழலையும் முன்வைத்து சிந்திக்கும்போது மூளை சாவு அந்த ஒரு பையனுக்கு மட்டும் நிகழவில்லை என்றே சொல்லலாம். சமூகத்தில் மிச்சமாய் இருப்பதாக நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதநேயத்திற்கும் மூளை சாவு ஏற்பட்டுவிட்டது.

நவீன் என்கிற அவ்விளைஞரை விடாமல் தலைக்கவசத்தால் தாக்கியவர்கள் அவருடைய எதிரிகள் அல்லர்; அவருடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள் என்பதுதான் கேட்கச் சங்கடமாக இருக்கிறது. படிக்கும் காலத்திலேயே பள்ளியில் நவீனைக் கேலி வதை செய்யும் பழக்கம் அக்குழுவிற்கு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் அவர்கள் மாறாமல் அதே கேலி வதை செய்யும் உணர்வுடன்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் இவ்விடயத்தில் யாரைக் குற்றம் சொல்வது? அத்தனை கொடூரமான மனம் படைத்த இயந்திரங்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என வருந்த வைக்கிறது.

கேலி வதை எப்படி உருவாகிறது?

கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல்  கூறப்படுகிறது.

தன்னைவிட பலவீனமானவர்களிடம் காட்டப்படும் அயோகியத்தனம்தான் கேலி வதை. தன் பலத்தைத் தன்னைவிட பலம் கொண்டவர்களிடம் காட்டும் வக்கற்றவர்களின் செயல்தான் கேலி வதை. அல்லது கூட்டமாகச் சேர்ந்துவிட்ட சிலர் ஒரு தனியனிடம் காட்ட முயல்வதையும் அப்படி வகைப்படுத்தலாம்.

இயல்பாகவே ஒருவனைப் பிடிக்காமல் போக பல உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிடிக்காமல் போனதை முன்வைத்து அவனைப் பகையாகப் பார்க்கும் 70%சதவீதம் ஆட்கள்  அவர்களை நோக்கி கேலி வதையை நிகழ்த்துகின்றனர். இதற்கு முன்பு பல்கலைக்கழகங்களில் கேலி வதையினால் தற்கொலை முயற்சி செய்ய முயன்றவர்களையும் தற்கொலை செய்து கொண்டவர்களை நாம் அறிவோம். இருந்தபோதும் கல்விக்கூடங்களில் ஏன் கேலி வதை செயல்களை நிறுத்த இயலவில்லை என்கிற கேள்வியே உருவாகிறது.

கேலி வதைக்கான துவக்கம்: அப்பாவின் பெயரைக் கிண்டலடித்தல்

bully 2வகுப்பில் அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதிலிருந்து கேலி வதை மெல்ல தலை தூக்கும். எப்பொழுதுமே அப்பாவின் பெயரை யாராவது கிண்டல் செய்தால் நமக்கு மிகவும் உணர்ச்சிவயமிக்க எதிர்ப்புணர்வு ஏற்படும். அதனைச் சீண்டிப் பார்க்கவே அப்பாவின் பெயரை வைத்துக் கிண்டல் செய்யும் ஒரு பழக்கம் ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகள் காணப்படுகின்றன.

இதுவே நாளடைவில் கேலி வதையின் உச்சத்தை நோக்கி நகர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் பிற மாணவர்களின் பெயர்களைக் கேலி செய்வது, பிறரின் அப்பாவின் பெயரைக் கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் தயவு செய்து அதனை ஒரு சாதாரண பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம்.

அப்பொழுது அதுவொரு நகைச்சுவையான விசயமாகத் தெரிந்தாலும் நாளடைவில் உங்கள் பிள்ளைகளால் பிறர் உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதன் வாயிலாக ஓர் ஆபத்தான பகைமை உணர்ச்சி அவர்களுக்கிடையே எழுகிறது. அதுவே வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.

உடல் சுபாவங்கள்/ பழக்கங்களை முன்வைத்த கேலி வதை

பெண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் ஆண்களையும், ஆண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் பெண்களையும் கிண்டல் செய்யத் துவங்குவதும் கேலி வதைக்கான ஆரம்பம்தான். வகுப்பில் அத்தகைய மாணவர்கள் இருப்பின் அவர்களைக் கீழ்மையாக நடத்துவது நம் பிள்ளைகள்தான் என்றால் நம்ப முடியுமா?

எங்கிருந்து அவர்கள் இதனைக் கற்றுக் கொண்டார்கள்? ‘பொட்டை’, ‘ஒம்போது’ என அவர்களைக் கேலியாக அழைப்பதன் முதலே இதுபோன்றவர்கள் கேலி வதை செய்வதற்குத் தயாராகிவிட்டனர் என்றே பொருள்படும். மற்ற உயிர்களின் சுபாவங்களை விமர்சிக்கவோ கேலி செய்யவோ நமக்கு உரிமை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழுமனப்பான்மையின் விளைவு 

வகுப்பில் மாணவர்கள் தங்களின் சிலரை நண்பர்களாகவும் மற்ற சிலரை எதிரிகளாகவும் வகுத்துக் கொள்வதும் கேலி வதைக்கு வழிவகுக்கும். இதுவே குழுமனப்பான்மையை உருவாக்கி அவனுக்கு ஒவ்வாத குழுவைத் தீவிரமாக எதிர்க்கவும் செய்யும்.

ஒருவேளை எதிரணி குழுவிலிருந்து ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டால் அவனைக் கேலி வதை செய்யத் துவங்குவார்கள். அது மிகவும் ஆபத்தான வன்முறையாக வெடிக்கும். அல்லது அக்குழு இக்குழுவைச் சேர்ந்த மாணவர்களைத் தனியாகச் சந்திக்கும்போது தன் பழியைத் தீர்த்துக் கொள்ள முற்படுவார்கள். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்காவிட்டால், பழித் தீர்க்கும் உணர்வு மாணவர்கள் மனத்தில் ஒரு பழக்கமாகப் பதிந்துவிடும்.

எப்படிக் களைவது? 

கேலி வதை தொடர்பான பிரச்சனையை நாம் ஒரு குற்ற செயலாக மட்டும் பார்க்கக்கூடாது. உளச்சிக்கல் தொடர்பாகவும் விரிவான உளவியல் ஆய்வாகவும் நாம் சிந்திக்கத் துவங்கினால்தான் அதனுடைய வேர்களைக் கிள்ளி எறிய முடியும். பலவீனமானவர்களைக் கீழ்மையாக நடத்தும், பலவீனமானவர்களிடம் வீரத்தைக் காட்ட முயலும், தனக்குக் கீழாக ஒருவன் மீது  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் ஆண்மை என நினைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆபத்தான பாரம்பரியமிக்க உணர்வை நம் மாணவர்களின் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.

அத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையே வீட்டிலிருந்து தொடங்குவதல் வேண்டும்.

பிற உயிர்களின் வேற்றுமைகளை அகவுணர்களை மதித்தல் 

சக மனிதர்களை விரோதியாகப் பாவிக்கக்கூடாது என்கிற போதனையைச் சலிக்காமல் சொல்லிப் பழக்கப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிடிக்காவிட்டாலும்கூட இன்னொருவனைக் காயப்படுத்தும், மனதளவில் துன்பப்படுத்தும் அதிகாரம் நம்மிடம் இல்லை என வலியுறுத்த வேண்டும்.

மேலும், மனிதர்களின் வேற்றுமை குணம் உள்ளவர்கள் இருப்பார்கள்; அனைவரிடமும் சமரசமாகப் போக முடியாவிட்டாலும், அவர்கள் மீது வன்முறையைக் காட்டுவது; நிகழ்த்துவது கோழைத்தனம் எனத் தொடர்ந்து விடாமல் வீட்டிலுள்ள பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அவர்கள் மனத்தில் அன்பை விதையுங்கள்; பகைமையை அல்ல.

அரவாணிகள்/திருநங்கைகள் சக மனிதர்கள்தான் என ஆழப்பதித்தல் 

bully1நாம் வாழும் சமூகத்தில் திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், சிறார் தொழிலாளிகள், ஏழை எளியவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,  பெண் தன்மை அதிகம் கொண்ட ஆண்கள், இப்படிப் பற்பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேச வேண்டும்.

அவர்கள் யாவரும் பிறப்பாலும் சூழ்நிலையாலும் அப்படியாக்கப்பட்டவர்கள்; அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது என அவர்களின் அகக்கண்களைத் திறந்துவிடுங்கள். இதுபோன்ற ஆட்களைச் சமூகத்தில் கவனிக்கும்போது சில பிள்ளைகள் அவர்களை அசூசையாகப் பார்க்கப் பழகிக் கொள்வதால்தான் தான் கல்விக் கற்கும் இடங்களில் அதுபோன்ற சுபாவங்களை ஒத்திருக்கும் சக நண்பர்களை இழிவாக நடத்த முயல்கிறார்கள் என சொல்லலாம்.

இவ்விரண்டையும் முதல் கட்டமாக ஒவ்வொரு பெற்றோர்களும் அமல்படுத்தினால் மட்டுமே, தன் ஒரே மகனை இழந்துவிட்டு அழும் நவீன் என்கிற இளைஞரின் தாயாரைப் போன்ற இன்னொரு தாயின் கண்ணீர் இம்மண்ணில் விழாது. தொடர்ந்து சிந்திபோம்; விவாதிப்போம்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ   wrote on 19 ஜூன், 2017, 11:39

  வேலியே பயிரை மேய்ந்தால் சட்டத்தை யார் மதிக்கப் போகின்றார்?

  இன்று சட்ட அமுலாக்கத்தைப் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணமும், சட்டம் நம்மை என்ன செய்யும் என்ற எண்ணமும் மேலோங்கி இருப்பதால் எவரும் சட்டத்திர்க்கு அஞ்சுவதாக இல்லை.

  அதன் வெளிப்பாடே தண்டனைக்குப் பயப்படாமல் குற்றம் புரிவது இயல்பு நிலையாகி விட்டது.

   

    

 • MOHAN mohan wrote on 19 ஜூன், 2017, 19:37

  தேனீ சடடத்தை நீங்க எப்ப கையிலே எடுத்தேங்க ,,சொல்லவே இல்ல …சொல்லி இருந்தால் நானும் வந்து கும்மி அடித்திருப்பேன்ல

 • MOHAN mohan wrote on 19 ஜூன், 2017, 19:37

  இந்த 5 பிணிகளை தூக்கில் போட வேண்டும்

 • PalanisamyT wrote on 20 ஜூன், 2017, 9:27

  1. பொதுவாகப் பள்ளி மாணவர்களின் இந்த அடாவடித்தனமானச் செயல்களுக்கு நம்மை சமாதானப் படுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்; உண்மையென்னவென்றால் தங்களின் பிள்ளைகளின் நடவடிக்கைகள், கல்வி இவற்றின் மேல் காட்டவேண்டிய குறைந்தப் பட்சக் கவனங்கள், அக்கறை இதையெல்லாம் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டியிருந்தாள் தங்கள் குடும்பத்திற்கும் இன்னும் தங்களின் பிள்ளைகளுக்கும் இப்படிப் பட்ட அவல நிலை ஏற்பட்டிருக்குமா? காலம் தாழ்ந்து இப்போது அழுது அவதிப் படுவதில் எந்தப் பயனுமில்லை. இனிமேல் சட்டம் தன் கடமையைச் செய்யும். 2. இதில் இன்னும் வேடிக்கையென்ன வென்றால் நாம் இப்போதுப் பார்த்தது வெறும் பனித் துளிதான்; இனிமேல் காணப் போகும் பனிமலையை இன்னும் பார்க்கவில்லை; காலையில் தங்கள் பிள்ளைகள் வெறும் பள்ளிச் சீருடைகள் அணிவது மட்டும்தான் பலப் பெற்றோர்களுக்குத் தெரியும்; அவர்கள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்கின்றார்களாரென்று எத்தனைப் பெற்றோர்களுக்குத் தெரியும். ஒழுங்காகப் பள்ளிச் செல்லாமல் வெளியில் சுற்றித் திரியும் மாணவர்களைத்தான் இப்போது நிறையப் பார்க்கின்றோம். பெற்றோர்கள் பள்ளிச் சென்று சம்பத்தப் பட்ட ஆசிரியர்களை அணுகிப் பேசுவதுமில்லை. தங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையிருந்திருந்தால் இப்படியெல்லாம் செய்வார்களா? இனிமேலாவது நம் பெற்றோர்களும் சம்பத்தப் பட்ட மாணவர்களும் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்; மாற்றிக் கொள்வதும் நன்று. நல்லப் பெற்றோர்களால் மட்டும்தான் நல்லச் சமுதாயம் உருவாகும்; நல்லது நடக்கும்; இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் வேதனையாகவுள்ளது!

 • abraham terah wrote on 20 ஜூன், 2017, 11:16

  பழனி அவர்களே! நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. அனைத்தும் பெற்றோர்களின் கையில். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். இங்குக் கூட சிலரின் எழுத்துக்களை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது!

 • தேனீ   wrote on 20 ஜூன், 2017, 12:50

  திரு. பழனிசாமி அவர்கள் கருத்து வரவேற்கப்பட வேண்டியதாகும். பெற்றோரின் முறையான கண்காணிப்பும் வளர்ப்பு முறையும் இல்லாததாலே நம் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப் படுகின்றது. 

 • [email protected] wrote on 21 ஜூன், 2017, 12:48

  பெற்றோர் பிள்ளைகளின் மீது, அவர்கள் பயிலும் பள்ளிக்குச்சென்று கண்காணிப்பதும் மிக அவசியம் என்பதனை அனைவரும் அறியவேண்டும். தவறுகள் நடப்பது அறியப்பட்டால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் அவ்வப்போது இதனை களைய ஆவணசெய்யவேண்டும்

 • [email protected] wrote on 26 ஜூன், 2017, 17:43

  அமலாக்கத்தை வாங்கிவிடலாம், அதற்கு துணைபுரிய அரசாங்கத்தில் 99 சதவீதம் உள்ள ஓர் இனம் முன்னாள் பிரதமர் ஒருவரால் உருவாக்கப்பட்டு அதன் திறன் தற்போது அனைத்து அரசாங்க நிலையிலும் இருப்பதால் , குற்றம் புரியும் வாதிகளுக்கு சாதகமாக இருப்பதால் வன்முறை அதிகரித்து வருகிறது . உள்ளூர் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் வன்முறைக்கு அஞ்சி இருப்பதை அறிந்து மனம் வேதனை படுகிறது . ஒரு நாட்டில் நேர்மையான காவல்படை தலைவரோ , காவல் அதிகாரி இருப்பதின் மூலமாகவே நாடும் மக்களும் சுதந்திரமாக வால்டிடமுடியும் . அதற்கு ஆவணசெய்வோம் , இறைவனை வணங்குவோம் .

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: