கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தை திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா?

dlp moe3கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் காயீர் முகமட் யுசொப் அனைத்து மாநில கல்வி இயக்குனர்களுக்கும் இருமொழி கல்வித் திட்டம் (DLP) குறித்து 27.10.2016 தேதியிடப்பட்ட கடிதத்தின் வழியாக அறிவிப்பு செய்திருந்தார். அந்த அறிவிப்போடு இந்தத் திட்டத்தில் இடம் பெற அரசு அனுமதி பெற்றுள்ள சுமார் 486 தொடக்கப்பள்ளிகளின் பட்டியலையும் இணைத்திருந்தார். அந்தப் பட்டியலில் மொத்தம் 47 தமிழ்ப்பள்ளிகள் இடம் பெற்று இருந்தன.

அதாவது, மொத்தமே 47 தமிழ்ப்பள்ளிகளுக்குத்தான் இருமொழித் திட்டம் அமல்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. 2015-இல் எந்தத் தமிழ்ப்பள்ளியுமே அரசு நிர்ணயித்துள்ள அடைவுநிலையில் இல்லாதால் இத்திட்டத்தில் எந்தப் பள்ளியும் இடம் பெறவில்லை.

இருப்பினும், 2016-இல் திடீரென 47 பள்ளிகளுக்கு அடைவு நிலை இல்லாத சூழலில் இந்தத் திட்டம் அமுலாக்கப்பட்டது. இதைக் கடுமையாக ஆட்சேபித்து மே-19 இயக்கத்தினர், பல சமூக இயக்கங்களின் ஆதரவோடு, கடந்த மாதம் ஒரு கண்டனப் போராட்டத்தை புத்ராஜெயாவில்  நடத்தி  கல்வி அமைச்சர் இந்தத் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் இருந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

நிலமை இவ்வாறு இருக்கையில், அதிர்ச்சியான தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது  என்கிறார் மே-19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆர். பாலமுரளி. அதாவது 27.10.2016 பட்டியலில் இடம் பெறாத ஒரு தமிழ்ப்பள்ளியில் பெற்றோர்களின் எதிர்புக்கு மத்தியில் DLP அமல் படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்.

இது பண்டார் உத்தாமாமாவில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்.

dlp moe4இது சம்பந்தமாக பள்ளியில் தங்கள் குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்த்துள்ள பெற்றோர்கள் புகார் கொடுத்தும் புகார்தாரர்களை அழைத்து விசாரிக்கவோ பதில் கொடுக்கவோ கல்வி அமைச்சும், கமலநாதனின் அலுவலகமும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவ்வாட்டாரத்தை சார்ந்த தமிழ் ஆர்வலர் கணியமுதன் கருத்துரைத்தார்.

இது சார்பாக கல்வி அமைச்சுக்கு புகார் கொடுக்கப்படும். அதோடு சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தப் போவதாக  அவர்  மேலும் கூறினார்.

தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பு மீது இந்த இருமொழித் திட்டம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்திட்டம் தமிழ்ப்பள்ளிக்கு உகந்ததல்ல என்ற நிலையில், ஒரு தலைமையாசிரியர்   பொறுப்பற்ற முறையில் இவ்வாறு செய்திருந்தால் அதை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்கிறார் இன்னொரு தமிழ் ஆர்வலர் சிவகுமார்.