‘பாஸுடன் பேச்சு தொல்லையாக போச்சு’

pkrசிறையில்   உள்ள   பிகேஆர்   நடப்பில்    தலைவர்    அன்வார்   இப்ராகிம்,    கட்சி   அதன்  கதவுகளை  பாஸுக்காக   திறந்தே   வைத்திருக்க    வேண்டும்  என்று   வலியுறுத்திக்  கடிதம்   எழுதியது  உண்மைதான்  என
பிகேஆர்  தலைமைச்   செயலாளர்   சைபுடின்   நசுத்தியோன்    உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால்,  பக்கத்தான்  ஹராபான்  கட்சிகள்,  பிகேஆர்  உள்பட,    தேர்தல்   இட   ஒதுக்கீட்டுப்  பேச்சுகளில்    சில    நடைமுறைகளைக்   கடைப்பிடிக்க    வேண்டியுள்ளது  என்றவர்  கூறினார்.

“அன்வார்   பாஸுடன்  பேச்சு   நடத்த   வேண்டும்   என்று   சொன்னது  உண்மைதான். ஆனால்,  ஹராபான்  ஒரு  முடிவெடுத்துள்ளது.   அம் முடிவு   பிகேரைக்  கட்டிப்போட்டுள்ளது.

“பாஸுடன்  பேச்சு  நடத்தச்   சொல்லி   ஈராண்டுகளாகவே   அன்வார்   கூறி  வருகிறார். அதன்படி   பிகேஆர்   தலைவர்களும்   பேச்சு   நடத்தினர்.  ஆனால்,  அவை,  இட ஒதுக்கீடு   பேச்சு  நடத்தும்   கட்டத்துக்குச்  செல்லவில்லை.

“அதற்கிடையில்,  பாஸ்   தலைவர்கள்   கோம்பாக்,  பெர்மாத்தாங்  பாவ்,   லெம்பா   பந்தாய் (எல்லாமே  பிகேஆர்  இடங்கள்)   உள்பட  100   நாடாளுமன்றத்   தொகுதிகளில்    போட்டியிடப்போவதாக    அறிவித்தனர்”.

மலேசியாகினியுடன்   உரையாடிய   சைபுடின்  பிகேஆருடன்  பேச்சுகள்   நடத்துவதற்கு  முன்பே  பாஸ்  பல  நிபந்தனைகளை   விதித்தது   என்றார்.

“பேச்சு  நடத்துவதற்கு  முன்பே  பாஸ்,    அதன்   இடங்களில்   கைவைக்கக்  கூடாது,   கிளந்தானில்   பிகேஆர்   தேர்தல்   பரப்புரை   செய்யக்கூடாது   என்றெல்லாம்  நிபந்தனைகளை  விதிக்கத்   தொடங்கியதாக   பேச்சுகளில்  ஈடுபட்ட   (பிகேஆர்)  தலைவர்கள்    தெரிவித்தனர்”,  என்றாரவர்.

இந்நிலையில்,   பக்கத்தான்   ஹராபான்   இட  ஒதுக்கீட்டுப்  பேச்சுகள்   தொடங்கி       அதில்   பாஸின்  இடங்களை  பங்காளிக்  கட்சிகள்   நான்கும்  பங்கு  போட்டுக்  கொண்டன.

“இதுவரை,  தீவகற்ப   மலேசியாவில்   நாடாளுமன்றத்   தொகுதிகளுக்கான  பேச்சுகள்  மட்டும்தான்   நிறைவடைந்துள்ளன.  சில  தொகுதிகளுக்கு  ஒன்றுக்கு   மேற்பட்ட   கட்சிகள்  உரிமை  கொண்டாடுகின்றன.  அவ்விவகாரத்துக்கு  முடிவு  கண்டபின்னர்   ஹராபான்  மாநிலச்  சட்டமன்றத்  தொகுதிகள்   குறித்து     பேச்சு   நடத்தும்.  அங்கும்  பாஸின்  இடங்கள் (ஹராபான்  கட்சிகளால்)  பங்கிட்டுக்  கொள்ளப்படும்”,  என்றார்.

பாஸுடன்   பேச்சு    நடத்து    என்ற   அறைகூவல்    வந்து  கொண்டிருந்தாலும்   இப்போதைக்கு   பாஸை  ஒதுக்கிவைத்துவிட்டுத்தான்  பிகேஆர்   பேச்சுகளில்   ஈடுபட  வேண்டியுள்ளது    என   சைபுடின்   கூறினார்.

“நேரம்   போய்க்கொண்டே   இருக்கிறது.  இப்போதைக்கு  ஹராபான்  கட்டமைப்புக்குள்  இருந்து  வேலை    செய்வதே   உசிதமாகப்  படுகிறது”.

பிகேஆர்  ஹராபான்  கட்டமைப்புக்குள்   பணியாற்றவும்   அதன்  முடிவுகளை   ஏற்றுக்கொள்ளவும்  கடமைப்பட்டுள்ளது  என்றவர்   குறிப்பிட்டார்.

பிகேஆரில்  பாஸுடன்   பேச்சு   நடத்த   வேண்டுவோரும்  அப்பேச்சுகளை   எதிர்ப்போரும்   அடிக்கடி   மோதிக்கொள்வதால்  கட்சியில்   சில  விரிசல்கள்   தோன்றத்   தொடங்கியுள்ளன.

இப்படிப்பட்ட  மோதல்களுக்கிடையில்,  பிகேஆர்  தலைவர்   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலும்   இடம்பெற்றுள்ள  ஹராபான்   தலைவர்   மன்றம்   இனி  பாஸுடன்  ஒத்துழைப்பதில்லை    என்று   அறிவித்தது.

ஆனால்,  கடந்த   சனிக்கிழமை   அன்வார்  ஹராபானுக்கு  அனுப்பிய   கடிதமொன்றில்     பாஸிடன்   பேச்சுகளுக்குக்  கதவுகளைத்    திறந்து  வைக்குமாறு   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எனவே,  பாஸுடன்   பேச்சுகள்   தொடர்பில்   பிகேஆர்   அடுத்து   எடுக்கப்போகும்  முடிவு   என்னவாக  இருக்கும்?.