எல்எப்எல் : விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கும் உரிமைகள் உண்டு

ericவிசாரணைக்கு    அழைக்கப்படுவோருக்கும்  உரிமைகள்  உண்டு  என்பதை   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  மறந்து  விடக்கூடாது.

“சட்ட  அமலாக்க   அமைப்புகளைக்  கேள்வி   கேட்பதற்கும்   குறைகூறவும்   அனுமதிக்க   வேண்டும்.  அவை,  தங்களிடமுள்ள   அதிகாரத்தைத்   தவறாக   பயன்படுத்தி    சம்பந்தமில்லாதவர்களை    எல்லாம்   விசாரணைக்கு   அழைக்கக்  கூடாது”,  என  உரிமைகளுக்காக   போராடும்   வழக்குரைஞர்கள்  அமைப்பு   செயல்  இயக்குனர்   எரிக்  பால்சன்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி-இன்   உதவியாளர்   இன்   ஷாவ்   லூங்-கை   மந்திரி   புசார்   இன்கோர்பரேடட்(எம்பிஐ)   மற்றும்  யுனிவர்சிடி  சிலாங்கூர் (யுனிசெல்)  மீதான  புலனாய்வு    தொடர்பில்   எம்ஏசிசி   விசாரணைக்கு   அழைத்ததை   அடுத்து   எல்எப்அல்    இந்த  அறிக்கையை    வெளியிட்டிருக்கிறது.

யுனிசெல்,  எம்பிஐ,  ஜனா  நியாகா  சென். பெர்ஹாட்   ஆகியவை  மீது   எம்ஏசிசி   நடத்திய   அதிரடிச்   சோதனை   குறித்து  இன்    ஓர்   அறிக்கையில்    கேள்வி    எழுப்பியிருந்தது   தொடர்பில்   அவர்    விசாரிக்கப்பட்டதாக    தெரிகிறது.

மாநில   அரசைக்  களங்கப்படுத்தும்   நோக்கில்   அச்சோதனைகள்   நடத்தப்பட்டதாக இன்  கூறியுள்ளார்.

இன்  மந்திரி   புசார்  அலுவலகத்தில்   தொடர்புத்துறை  இயக்குனர்.  அவருக்கும்  விசாரணைக்கு  இலக்காகியுள்ள  விவகாரத்துக்கும்   தொடர்பில்லை    என்பது   தெளிவு   என  பால்சன்   கூறினார்.

“பத்திரிகை  தொடர்புத்துறை   அதிகாரி   என்ற   முறையில்  எம்ஏசிசி-இன்   அதிரடிச்  சோதனை   குறித்து   மந்திரி   புசார்   அலுவலகக்  கருத்தைத்    தெரிவிக்கும்  பணியைத்தான்   அவர்   செய்திருக்கிறார்”.

இன்னிடம்  சம்பந்தம் சம்பந்தமில்லாத   கேள்விகளைக்  கேட்டிருக்கிறார்கள்   என்றும்  பால்சன்   கூறினார்.   எம்ஏசிசி  அலுவலகத்துக்கு    விசாரணைக்குச்  செல்வதாக   அவர்   டிவிட்   செய்திருந்தது   குறித்துக்  கேட்டிருக்கிறார்கள்.   அறிக்கை   விடுவதற்கு    அவருக்கு    அதிகாரம்   உண்டா    என்று    கேட்டிருக்கிறார்கள்.

“இக்கேள்விகள்   எல்லாமே    ஆழமற்றவை,  விசாரணைக்குத்   தொடர்பற்றவை.மொத்த   நடவடிக்கையும்   வீண்  அலைக்கழிப்பு   போலத்தான்  தோன்றுகிறது.   எம்பிஐ,   யுனிசெல்மீதான   எம்ஏசிசி   விசாரணை  குறித்து    கருத்துரைக்கும்  ஷாவ்  லூங்-கையும்   மற்றவர்களையும்   மிரட்டி வைக்கும்   நோக்கமும்   அதில்   தெரிகிறது.

எம்ஏசிசி  “தொழில்முறைப்படியும்  பாகுபாடின்றியும்   விசாரணைகளை   நடத்த   வேண்டும்”   என்று  வலியுறுத்திய   பால்சன்,     ஆணையம்  “பொதுமக்கள்  குறைகூறுவது  குறித்து   எளிதில்   உணர்ச்சி   வசப்படக்கூடாது”  என்றும்  வலியுறுத்தினார்.

இன்னிடம்    ஐந்து  மணி  நேரம்   விசாரணை   நடத்தியுள்ளனர். விசாரணை  குறித்து   பேசிய   இன்,   தன்  சகாவான   காலஞ்சென்ற  தியோ   பெங்  ஹோக்குக்கு   நிகழ்ந்ததை   நினைவுகூர்ந்தார்.

“எம்ஏசிசிக்குச்  சென்ற  தியோ   திரும்பி   வரவே  இல்லை. அதனால்,  நாம்   எங்கு  இருக்கிறோம்  என்பதை  மற்றவர்களுக்குத்   தெரியப்படுத்துவது   நல்லது”,  என்றார்   இன்.

2009-இல்  எம்ஏசிசிக்குச்  சென்ற  தியோ   அங்கு   மாடியிலிருந்து   விழுந்து   இறந்தார்.