வட கொரிய நிறுவனங்களை மூடிவிட சீனா கட்டளை

north Korea Bசீனாவில் செயல்பட்டு வருகின்ற வட கொரிய நிறுவனங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மூடிவிட சீனா கட்டளையிட்டுள்ளது.

அணு ஆயுதங்களை உருவாக்குவதில் கண்டு வரும் முன்னேற்றத்திற்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் தடைகளை நடைமுறைப்படுத்தும் சீனாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.

வட கொரிய நிறுவனங்களோடு எடுக்கப்பட்டுள்ள கூட்டு வணிக முயற்சிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் பெரும் அளவிலான வர்த்தகத்திற்கு சீனாதான் முக்கிய பங்காளியாக உள்ளது. சீனாவின் தற்போதைய நடவடிக்கை வட கொரியா சந்தித்து வருகின்ற பொருளாதார இன்னல்களை அதிகரிக்க செய்வதாக அமையும்.

சர்வதேச அழுத்தங்களில் இருந்து வட கொரியாவை சீனா பாதுகாத்து வருகிறது என்று அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து, நிலக்கரி, கடல் உணவு மற்றும் ஜவுளி பொருட்கள் உள்பட பெரிய இறக்குமதிகளை சீனா ஏற்கெனவே தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil