காவிரி காக்க கடைசி வாய்ப்பு: தஞ்சை மாநாட்டிற்கு அழைப்பு


காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை:

‘’காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக நடுவண் அரசு வழக்கறிஞர் பேசும் போதும், கர்நாடக வழக்கறிஞர்கள் பேசும்போதும், உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவர் நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்துகள் கூறும்போதும், சில வேளைகளில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராகத் தமிழ்நாடு வழக்கறிஞர்களே பேசும்போதும் நமக்குக் குலைநடுக்கம் ஏற்படுகிறது!

ஏற்கெனவே இருந்த முதலமைச்சர்களைப் போலவே, எடப்பாடி பழனிச்சாமியும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் உரியவாறு அக்கறை காட்டவில்லை. அக்கறை காட்டாதது மட்டுமின்றி, நரேந்திர மோடி அரசுக்கு விலைபோய், காவிரி உரிமையைக் காவு கொடுக்கத் துணிந்து விட்டார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, உமாபதி இருவரும் கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டிக் கொள்வதைத் தமிழ்நாடு எதிர்க்கவில்லை; தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் கொடுத்தால் போதும் என்று ஒரு கட்டத்தில் கூறினர். இவ்விரு வழக்கறிஞர்களின் இக்கூற்றைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், திருவாரூர்க்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை “திரும்பிப்போ” என்று கருப்புக் கொடி காட்டினோம். அதன் பிறகுதான் கர்நாடகம் புதிய அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவிக்காது என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டார். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டுவிட்டு, அமைதியாகி விட்டன.

காவிரிப் பாசன மாவட்டங்களில் உழவர் அமைப்புகள் உரியவாறு போராடவில்லை. காவிரி நீரைப் பருகும் மற்ற மாவட்டங்களில் இதற்கு எதிராக எந்த அசைவும் இல்லை.

தமிழ்நாட்டின் இந்த செயலற்றதன்மையைக் கண்டறிந்த பின் நரேந்திர மோடி அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார், உச்ச நீதிமன்றத்தில் ஒளிவு மறைவின்றி தமிழ்நாட்டின் குரல் வளையை அறுப்பது போன்ற கருத்துகளைக் கூறினார். இதோ அவை :

“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குழப்பங்கள் பல இருக்கின்றன. அத்தீர்ப்பில் நடுவண் அரசுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால்தான் அது செயலுக்கு வரும். அந்த இறுதித் தீர்ப்பில் நாடாளுமன்றம் திருத்தங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் செய்ய அதிகாரம் இருக்கிறது”.

கர்நாடக அரசு வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், “தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் தண்ணீர் திறந்துவிட காவிரித் தீர்ப்பாயம் கூறிய தீர்ப்பை ஏற்க முடியாது; ஆண்டுக்கு ஒரு தடவைதான் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியும்; தீர்ப்பாயம் கூறியுள்ள தண்ணீரின் அளவு 192 ஆ.மி.க. என்பதை 102 ஆ.மி.க.வாகக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். இப்போது கர்நாடகப் பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீலும் அதையே வலியுறுத்துகிறார்.

விழித்திருக்கும் போதே கண்ணைப் பறிப்பது போன்ற கொடிய வாதங்களை மோடி அரசும் கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் கூறின. காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாம் கண்டன அறிக்கை வெளியிட்டோம். அதன் தலைப்பு : “காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு தூண்டுகிறது” என்பதாகும்!

வெளிப்படையாக நரேந்திர மோடி அரசு – நம் காவிரியின் மார்பறுக்கக் கத்தியைத் தீட்டிய பின்னும் தமிழ்நாடு அமைதி காக்கிறது.

தமிழ்நாட்டின் செயலற்ற தன்மையைக் கண்டு கொண்ட மோடி அரசு அடுத்து, தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசைமாற்றிவிட ஜக்கி வாசுதேவைப் பிடித்தது.

“ஆறுகளைக் காப்போம் – பாரதம் காப்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டிலிருந்து அனைத்திந்திய பரப்புரை ஊர்திப் பயணத்தை புதுதில்லி நோக்கி ஏற்பாடு செய்தது. அந்த ஊர்திப் பயண தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு ஆதரவளித்தார்.

காவிரிக் கரை நெடுகிலும் இருபுறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நட வேண்டும், அதற்கான நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும், அப்படி மரங்கள் நட்டால் மழை பொழியும், காவிரி கரைபுரண்டு ஓடும் என்பதுதான் ஜக்கியின் “ஆறுகள் காப்போம்” செயல்திட்டம்! அத்துடன் ஆறுகள் இணைப்பைப் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இவ்வாறு பேசுவதன் பொருள் என்ன? “கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் கேட்காதே, கரையோரங்களில் மரம் நடு; கங்கை இணைப்புக் கற்பனையில் மிதந்து கொண்டிரு” என்பதாகும்.

எப்பொழுதுமே இந்திய அரசுக்கு – அதில் காங்கிரசு ஆண்டாலும், பா.ச.க. ஆண்டாலும் தமிழர்களை ஒடுக்கி வைக்க வேண்டும் என்ற இனப்பகை உண்டு! காங்கிரசு ஆட்சி வகுத்த திட்டங்களைத் தீவிரப்படுத்தும் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது.

நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி, இந்தி – சமற்கிருதத் திணிப்பு வரிசையில் தமிழர்களின் காவிரி உரிமை மறுப்பும் காங்கிரசு திட்டங்களே! கர்நாடகாவில் – இப்போது தண்ணீர் தர மறுப்பது காங்கிரசு ஆட்சியே! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது காங்கிரசின் மன்மோகன் ஆட்சியே!

திராவிட ஆட்சிகளோ, “கங்காணி அதிகாரத்தில் களியாட்டம்; கணந்தோறும் கையாடல் வெறியாட்டம்” என்ற “இலட்சியத்தில்” இயங்குபவை! ஆட்சியில் இல்லாத போதுகூட திராவிடக் கட்சிகள் தமிழ்நாடு உரிமை மீட்புப் போராட்டங்களை உரியவாறு மக்கள் எழுச்சிப் போராட்டங்களாக நடத்துவதில்லை.

இன்றையத் தமிழ்நாட்டின் நிலை என்ன? 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தில்லிப்படையுடன் வந்த மாலிக்காபூர் தமிழ்நாட்டைச் சூறையாடியதைப் போல், இப்போது நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டைச் சூறையாடுகிறது.

காவிரிப் பாசன மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களை வானம் பார்த்த புஞ்சை நில மண்டலமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் உழவர்கள் தங்கள் விளைநிலங்களை விற்பனை செய்ய முன் வருவார்கள். பெரிய அளவு இனப்படுகொலையும் இரத்தக் களரியும் தேவைப்படாமல், இம்மாவட்டங்களின் விளை நிலங்களை ஓ.என்.ஜி.சி.க்கும் தனியார் பெருங்குழுமங்களுக்கும் குத்தகைக்கோ, மொத்த விலைக்கோ ஒப்படைப்பார்கள் என்பது இந்திய ஆட்சியாளர்களின் செயல் தந்திரம்!

தாங்களே முன்வந்து உழவர்கள் தங்கள் நிலங்களை ஒப்படைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் காவிரித் தண்ணீர் தமிழ்நாடு வராமல் தடுக்க வேண்டும் என்பது மோடி அரசின் திட்டம்! அதனால்தான் நம் காவிரித் தாயின் மார்பறுக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நடுநிலையாகச் செயல்பட்டு தமிழர்களுக்குக் காவிரியில் நீதி வழங்கிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், மோடி அரசு “உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை; நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரம் உண்டு” என்று தொடர்ந்து வல்லடி வழக்கு பேசுகிறது.

தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் 192 ஆ.மி.க. தண்ணீர் திறக்க வேண்டும். அதையும் மாதவாரியாகத் திறக்க வேண்டும். ஒரு மாதம் திறக்க வேண்டிய தண்ணீரையும் நான்கு வாரங்களுக்குப் பிரித்துத் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நீக்கி, தண்ணீர் அளவைக் குறைத்து காலவரம்பை மாற்றி ஒரு கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்திற்கு நெருக்கடிகள் தருகிறது.

குறுக்கிட்டுப் பேசும் நீதிபதிகளின் குரலைக் கேட்டால் மேக்கேத்தாட்டின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட அனுமதிப்பார்ளோ, தண்ணீர் அளவைக் குறைப்பார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

-இந்த நெருக்கடியான நேரத்தில்தான் தஞ்சையில் 06.10.2017 வெள்ளி மாலை 3 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை காவேரி திருமண மண்டபத்தில், “வஞ்சக வலையறுக்கும் காவிரிக் காப்பு மாநாடு” நடைபெறுகிறது.

தன்கட்சி, தன் இயக்கம் என்ற தன்னோக்குக் கண்ணோட்டம் இல்லாமல் தமிழர் உரிமை மீட்பு என்ற நிலையில் செயல்படும் காவிரி உரிமை மீட்புக் குழு இம்மாநாட்டை நடத்துகிறது.

கர்நாடக எல்லைக்குள் புகுந்து, மேக்கேத்தாட்டு அணை தடுக்க தேன்கனிக்கோட்டையிலிருந்து 5 ஆயிரம் உழவர்களுடன் பேரணியாகச் சென்று எல்லையில் கைதான காவிரி உரிமை மீட்புக் குழு,

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் 19 நாள் காத்திருப்புப் போராட்டம் இரவு பகல் 24 மணி நேரமும் நடத்தி ஒற்றைத் தீர்ப்பாயம் நிறைவேறாமல் நிறுத்தி வைத்துள்ள காவிரி உரிமை மீட்புக் குழு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் ஏழுநாள் தொடர்ந்து ஊருக்கு வெளியே ஓடிவரும் தொடர்வண்டியை நடுவழியில் மறித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடப் போராடிய காவிரி உரிமை மீட்புக் குழு,

கர்நாடகம் காவிரியில் அணைகட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன், துடித்தெழுந்து ஒருநாள் அவகாசத்தில், உழவர்களைத் திரட்டி திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டி, கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்க்கும் நிலைக்கும் தமிழ்நாடு அரசை மாற்றிய காவிரி உரிமை மீட்புக் குழு,

தஞ்சையில் நடத்தும் வஞ்சக வலையறுக்கும்  காவிரிக் காப்பு மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறது. தமிழ்நாடு முழுவதுமிருந்து வாருங்கள் தமிழர்களே! அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் வகுப்போம்!’’

-nakkheeran.in

TAGS: